திருப்பூர்:
தமிழகத்தில் தீக்கதிர் நாளிதழ் விற்பனையை மக்களிடம் விரிவான அளவில் அதிகப்படுத்தினால் அது மாற்று அரசியலுக்கு வழிவகுக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வெள்ளியன்று தீக்கதிர் சந்தா சேர்ப்புக்கான தயாரிப்புக் கூட்டம் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளர் கே.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசுகையில் கூறியதாவது: தமிழகத்தில் எண்ணற்ற மக்கள் பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக தலையிட்டு வருகிறது. அதேசமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைபாட்டை மக்களிடம் நாம் கொண்டு சேர்க்க வேண்டும். இன்றைக்கு தமிழகம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறது. தற்போது தமிழகத்தில் இருக்கும் மிக முக்கியமான முரண்பாடு கார்ப்பரேட்டுகளுக்கும், மக்களுக்கும் இடையில் நடைபெறும் போராட்டமே ஆகும்.

இதில் பிற அரசியல் கட்சிகள் எல்லாம் கார்ப்பரேட்டுகளின் பக்கம் நிற்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் மக்கள் பக்கம் நின்று உறுதியாகப் போராடி வருகிறது. இன்றைக்கு இருக்கும் ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அவர்களுக்கு ஆதரவான செய்திகளை, ஆதரவான அரசியல் கட்சிகளைப் பற்றியே முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிடுகின்றன.

ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு விட வேண்டும் என நீதிமன்றத்தில் வாதிட்ட ஒரே அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். அதன்படி சிபிஐ விசாரணைக்கு அந்த வழக்கை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுச் செய்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. முக்கொம்பு அணை மதகுகள் உடைந்ததற்கும் மணல் கொள்ளைதான் காரணம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதுபோன்ற மிக முக்கியமான பிரச்சனைகளில் கட்சியின் நிலைபாட்டை பிரதான ஊடகங்கள் வெளியிடுவதில்லை.

அரசியல் மாற்றத்துக்கான இன்றைய சூழ்நிலையில் தீக்கதிர் நாளிதழ்தான் நம் கருத்துகளை கொண்டு செல்லும் முக்கியமான ஆயுதமாக, ஒரே ஊடகமாக உள்ளது. தீக்கதிர் விற்பனை என்பது வெறும் வரவு -செலவு விவகாரம் அல்ல. தீக்கதிர் விற்பனை அதிகரிப்பது என்பது மாற்று அரசியலைக் கொண்டு செல்லும் மிக முக்கியமான பணியாகும். கட்சி ஊழியர் யாரும், எல்லா நாளும் ஒருவரிடம் தொடர்ச்சியாக நம் அரசியலை கொண்டு சென்றுவிட முடியாது. ஆனால் தீக்கதிர் சந்தாதாரராக ஒருவரை ஆக்கினால் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நம் அரசியலை தீக்கதிர் அவரிடம் பேசும். தீக்கதிர் சந்தாவை, விற்பனையை தமிழகத்தில் அதிகரிப்பது மாற்று அரசியலுக்கு வழிவகுக்கும். திருப்பூரில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் தீக்கதிர் சந்தா சேர்ப்பில் கட்சி அணியினர் தீவிர அக்கறையும், உற்சாகமும் காட்டி வருகின்றனர். இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

முன்னதாக இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் திருப்பூர் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தின் விரிவான திட்டமிடல் மற்றும் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் தீக்கதிரை எல்லா பகுதிகளிலும் கொண்டு சேர்ப்பது பற்றி விளக்கினர். இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் இடைக்குழுச் செயலாளர்கள், தீக்கதிர் முகவர்களும் தீக்கதிர் விற்பனை அதிகரிப்பு குறித்து கருத்துத் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் இலக்கைத் தாண்டி தீக்கதிரை அதிகப்படுத்துவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: