மதுரை;
திருச்சிராப்பள்ளி திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் அரசாணையை மதிக்காமல் சட்ட விரோதமாக கோவிலைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ஒன்பது மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள கட்டங்களை அகற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் மத்திய தொல்லியல் துறையின் இயக்குநர், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர், குளித்தலையைச் சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் பழமையான கோவில்கள், கோபுரங்கள் உள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் ஒன்பது மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டங்களைக் கட்டக் கூடாது என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் அரசாணையை மதிக்காமல் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டி உள்ளனர். 30.01.1997 ஆம் ஆண்டு அரசாணைப்படி கோவிலைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கட்டடங்கள் கட்டக்கூடாது. ஒன்பது மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடங்கள் கட்டக் கூடாது.

இந்த அரசாணையை மீறி அப்பகுதியில் 73 கட்டடங்கள் ஒன்பது மீட்டர் உயரத்திற்கு மேல் கோவிலிலிருந்து 100 மீட்டருக்குள் கட்டப்பட்டுள்ளன. கோவில் அருகே அமைந்துள்ள உத்தர வீதி, சித்திர வீதிகளில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விதிகளை மீறிப் பல கட்டடங்கள் ஒன்பது மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ளன.

விதிமீறிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை ஆய்வு செய்து அகற்ற ஆணையாளரை நியமனம் செய்ய வேண்டும்’ என அந்த மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு வெள்ளியன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை இயக்குநர், திருச்சிராப்பள்ளி ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.