திருவனந்தபுரம்:
பெருவெள்ளத்தில் சிக்கிய கேரளத்திற்கு இலவச அரிசி தரமுடியாது என்பது கேரள மக்களை நசுக்கி கொல்வதுபோல் உள்ளதாக மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கேரளத்துக்கு 1.8 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இலவசமாக வழங்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசால் கடிதம் எழுதப்பட்டிருந்தது. ஆனால், 89.540 மெட்ரிக் டன் அரிசி மட்டுமே மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டது. இந்த அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.25 வீதம் வழங்க வேண்டும் என மத்திய அரசு கேட்டிருக்கிறது. இதன்படி மாநில அரசு ரூ.223 கோடிக்கு மேல் வழங்க வேண்டும். வழக்கமாக கிலோவுக்கு மூன்று ரூபாய் என்கிற மானிய விலையில் மத்திய அரசு அரிசி வழங்கி வருகிறது.

நிவாரண முகாம்களிலிருந்து வீடுகளுக்கு திரும்புவோருக்கு 5 கிலோ அரிசி 22 அத்தியாவசியப் பொருட்கள் உட்பட இலவச பொட்டலமாக வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பெருவெள்ளப் பாதிப்பில் எப்சிஐ கிடங்கிலும் பொதுவிநியோக துறையின் கிடங்குகளிலும் பெரிய அளவில் அரிசி நாசமடைந்துள்ளன. இதையும் பரிசீலித்து இலவசமாக அரிசி வழங்க வேண்டியது கட்டாயமாகும். அதற்கு மத்திய அரசு தயாரில்லை.

பெருவெள்ளத்தில் மூழ்கிய கேரள மக்களை நசுக்கி கொல்வது போன்றதாகும் இது.இச்செயலை மத்திய அரசு கைவிடவேண்டும். ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த நிதி உதவியை நிராகரித்ததும். இலவச அரிசியை மறுப்பதும் கேரள மக்களுக்கு எதிரான கொடூரச் செயலாகும். மாநில அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் அவசர உடனடி உதவியாக கேட்டது. ஆனால் வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. கேரளத்திற்கு வந்த பிரதமரும் உள்துறை அமைச்சரும் பெருவெள்ளத்தின் நேரடி காட்சிகளை பார்த்தனர். ஆனாலும் இதுபோன்ற நிலைப்பாட்டை மேற்கொள்வது மிகுந்த வருத்தமளிக்கிறது.இவ்வாறு கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: