பெங்களூரு;
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் கணக்காளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-ஆவது முறையாக சோதனை நடத்தியுள்ளனர்.

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் கணக்காளராக, பெங்களூருவைச் சேர்ந்த எச்.பி. சுனில் இருக்கிறார். பட்டயக் கணக்காளரான இவர், குமாரசாமியின் மனைவி அனிதா, மகன் நிகில், சகோதரரும் அமைச்சருமான ரேவண்ணா உள்ளிட்டோருக்கும் கணக்காளராக உள்ளார்.
இந்நிலையில் வருமானவரித் துறை அதிகாரிகள் வியாழனன்று சுனிலின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 12 மணி நேரம் இந்த சோதனை நடைப்பெற்றது.கடந்த மே மாத இறுதியில்தான் சுனில் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், 3 மாதங்களில் 2-வது முறையாக தற்போது அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருப்பது, மதச்சார்பற்ற ஜனதா தள நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் செயலாளர் ரமேஷ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “கர்நாடகத்தில் காங்கிரஸூடன் கூட்டணி அமைத்த பிறகே, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினரின் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடைபெறுகிறது; அதற்கு முன்பு டி.கே. சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸாரின் வீடுகளில் தான் சோதனை நடத்தப்பட்டது; இதனால், பாஜக-வுடன் கூட்டணி வைக்காததால் மத்திய அரசு மதச்சார்பற்ற ஜனதாதளத்தை குறி வைக்கிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது; இதுகுறித்து கட்சி தலைவர் தேவகவுடாவிடம் பேசி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: