ஈரோடு:
பவானி அருகே கழிவு நீரை முறைகேடாக வெளியேற்றி வந்த தொழில்சாலையின் அனுமதியை விவசாயிகள் சங்கத்தின் பலகட்ட போராட்டத்திற்கு பிறகு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ரத்து செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா பெரிய புலியூர் பகுதியில் அபிராமி பிரிண்டர்ஸ் என்ற நூல் சாயமேற்றும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இதில் நூல், ஆடைகள், துணிகள் போன்றவற்றிற்கு தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 6டன் வீதம் சாயமேற்றப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததன்பேரில் சாயமேற்றும் தொழிற்சாலை இயங்கி வந்தது. ஆனால், இந்த தொழிற்சாலையில் இருந்து விதிமுறைகளை மீறி கழிவு நீரை நேரடியாக விவசாய நிலங்களிலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் விடுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் அனுமதி இல்லாமல் தொழிற்சாலை வளாகத்திற்குள் சைசிங் அலகு ஒன்று செயல்பட்டு வந்தது தெரியவந்தது. சுத்திகரிப்பு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆர்.ஒ. முறையில் அதிக கொள்ளளவு (18 கேஎல்டி) கொண்டதாக இருந்ததும், விதிமுறைகளை மீறி கழிவு நீரை வெளியேற்றுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து விதிமுறைகளை மீறி கழிவுகள் வெளியேற்றப்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் தொழிற்சாலை நிர்வாகம் தொடர்ந்து கழிவு நீரை வெளியேற்றி வந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்பிரச்சனை குறித்து வழக்கு தொடர்ந்தார். இதில் சம்மந்தப்பட்ட ஆலையில் மீண்டும் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனடிப்படையில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த ஆக.2 ஆம்தேதியன்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், தொழிற்சாலை இயங்கி வரும் பகுதிகளில் அனுமதி இல்லாத வேறு விதமான செயல்பாடுகள் இருந்து வந்தது தெரியவந்தது. அதே போன்று கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் ஆர்.ஒ. கருவிகள் இயக்கப்படாததுடன், தொழிற்சாலை இயக்குவதற்கான அனுமதி ஏற்கனவே முடிவடைந்திருந்தது. அதற்காக அனுமதி பெற விண்ணப்பிக்கவில்லை. மேலும், தொழிற்சாலை அமைந்துள்ள இடம் உகந்ததாக இல்லை. அதைச்சுற்றிய மூன்று பகுதிகளிலும் விவசாய நிலங்கள் அமைந்திருந்தது. இச்சூழலில் அதனருகில் உள்ள எல்பிபி வாய்க்கால் வழியாக கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனால் நிலத்தடி நீரும், வாய்கால் நீரும் பெருமளவிலும் மாசடைகிறது என உயர்நீதி மன்றத்தில் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீர் மாசுபாடு தடுப்பு சட்டம் 1974, 27 ஆவது பிரிவின் படியும், காற்று மாசுபாடு தடுப்பு சட்டம் 1986, 21ன் பிரிவின் படியும் தொழிற்சாலையின் அனுமதியை 20.08.2018 தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ரத்து செய்துள்ளது. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு விவசாயிகளுக்கும், விவசாய சங்கத்திற்கும் கிடைத்த வெற்றியால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: