திருச்சிராப்பள்ளி:
முக்கொம்பு கொள்ளிடம் கதவணைபணியை முதலிலேயே பார்த்திருக்க வேண்டாமா என்ற கேள்விக்கு, யாருக்காவது நோய் வருமென்று தெரியுமா? என பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் ரூ.410 கோடி மதிப்பில் 2 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா பாசனத்திற்கே பற்றாக்குறையாகத்தான் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கட்டில் தண்ணீர் திறக்கப்படாமல் அதில் உள்ள 45 மதகுகளும் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தன.கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி, அங்கிருந்த திறக்கப்பட்ட தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெ
டுத்தது. இதனால், கடந்த 19 ஆம் தேதி திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தின் ஒரு பகுதி உடைந்தது. புதனன்று இரவு முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் உடைந்து ஆற்றில் மூழ்கின.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 24 வெள்ளியன்று முக்கொம்பு கொள்ளிடம் அணையின் இடது பகுதியில் உடைந்த அணையை பார்வையிட்டார். 3 மற்றும் 4-வது மதகுகளுக்கு நடுவில் நின்று தற்காலிகப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் குறித்து தனிச் செயலாளர் சாய்குமார், முதல்வருக்கு விளக்கினார்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 செட்டர்கள் உடைந்துள்ளது. அதை தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி 4 நாட்களில் முடியும். முக்கொம்பு அணை உடைந்ததால் சம்பா சாகுபடி எவ்விதத்திலும் பாதிக்காது. முக்கொம்பில் இப்போது உடைந்த அணையில் இருந்து 100 மீட்டர் தள்ளி புதிதாக 45 மதகுகளுடன் ரூ.325 கோடி செலவில் அணைக்கட்ட உள்ளோம். இந்த அணைக்கு அருகில் வடக்கு பகுதியில் 10 மதகுகளுடன் ரூ.85 கோடி செலவில் புதிதாக ஒரு அணை கட்ட உள்ளோம்.

இதற்கு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். பின்னர் விரைவாக பணிகளை துவக்கி 15 மாதத்தில் அணைகள் கட்டும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே உடைந்த திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் கைவிடப்பட்ட பாலம். அதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த பாலத்தை சீரமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

கொள்ளிடம் கதவணை பணியை முதலிலேயே பார்த்திருக்க வேண்டாமா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு,ஆண்டு தோறும் அணைகளை பராமரித்து வருகிறோம். நாம் கூடத்தான் நன்றாக இருக்கிறோம். திடீரென்று காய்ச்சல் வந்து விடுகிறது அல்லவா. யாருக்காவது நோய் வரும் என்று தெரியுமா? அணை உடைந்தது தற்காலிகமாக ஏற்பட்ட விபத்து என்று முதல்வர் பதிலளித்தார்.

பின்னர் அங்குள்ள சிறப்பு விருந்தினர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.புதிய அணை கட்டுமானப்பணிகளை விரைந்து முடிப்பது, நடப்பு சம்பா பரு
வத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தண்ணீர் அளிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். உடைந்த அணையில் இருந்து 100 மீட்டர் தள்ளி அணைக்கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தின் கரையில் ஒரு கொடி நட்டு வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.