தீக்கதிர்

எல்லோருமே எனக்கு ‘மச்சான்கள்’தான்.. நடிகை நமீதா வழியில் ம.பி. பாஜக முதல்வர்…!

போபால்:
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக-வைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருக்கும் நிலையில், அவரது மச்சான் போக்குவரத்து காவலரை நடுரோட்டில் வைத்து மிரட்டியது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

மத்தியப்பிரதேச மாநிலம், போபால் விதான் சபா அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர்கள், அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி, காரில் உள்ளவர்களிடம் ஆவணங்களைக் கேட்டுள்ளனர். இதையடுத்து, காரில் இருந்து இரண்டு பெண்களுடன் இறங்கிய நபர் ஒருவர், ‘நான் யார் தெரியுமா, முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மச்சான்; என் மனைவி அவரின் தங்கை; எங்களிடமே ஆவணங்களைக் கேட்கிறீர்களா?’ என ஆவேசத்துடன் காவலர்களை மிரட்டியுள்ளனர்.

மேலும், யாருக்கோ போன் செய்து, “இந்தா பேசு.. சி.எம் சொந்தக்காரங்ககிட்டயே டாகுமெண்ட்ஸ் கேட்பியா… உயர் அதிகாரி பேசுகிறார்.. இந்தா பேசு..’ என்று காவலரின் முகத்துக்கு நேராக போனை எடுத்து நீட்டியுள்ளார்.

ஒருகட்டத்தில் கூட்டம் கூடுவதைக் கண்ட போலீசார், நடந்த சம்பவங்கள் அனைத்தையும், தங்கள் செல்போனில் பதிவு செய்துகொண்டு, அவர்கள் வந்த வாகனத்தின் எண்ணையும் குறித்துக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மச்சான் மற்றும் அவரது சகோதரியின் மிரட்டல் சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில், இதுகுறித்து முதல்வரிடமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “போக்குவரத்துக் காவலரை மிரட்டிய அந்த நபர் உங்கள் மச்சானா?” என்று அவர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த சிவராஜ் சிங் சவுகான், ‘எனக்குக் கோடிக்கணக்கில் சகோதரிகள் உள்ளனர்; அனைத்துப் பெண்களுமே என் சகோதரிகள்தான்; எனவே, அனைவரும் எனக்கு மச்சான்தான்” என்று கூறி மழுப்பியுள்ளார்.நடிகை நமீதாதான் ஆண்கள் அனைவரையும் மச்சான்ஸ் என்று அழைப்பார். தற்போது நமீதா வழியில், சிவராஜ் சிங் சவுகானும் அனைவரையும் மச்சானாக்கி அசத்தியுள்ளார்.