மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பெருக்கெடுத்தோடும் பவானியாற்றால் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் தாலுகாவில் வேறெங்கும் காண இயலாத வினோத சூழல் நிலவி வருகிறது. மேட்டுப்பாளையத்தின் நகரம் மற்றும் அதன் கிழக்கு பகுதியான சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பவானியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக ஐநூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கி இதில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒன்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடபட்டிருந்த வாழைமரங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி பல லட்சம் வாழைகள் சேதமானதோடு, இப்பகுதியில் உள்ள சாலைகள், தரைப்பாலங்கள் மூழ்கி இப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது, இதனால் மக்களின் இயல்பு வாழ்கையே முடங்கியுள்ளது.  அதேநேரத்தில் மேட்டுப்பாளையத்தின் மேற்கு பகுதியான காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் அனைத்தும் நீரின்றி கடும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. மேட்டுப்பாளையத்தின் ஒரு பகுதி, விவசாயிகள் வெள்ளப்பெருக்கால் பெரும் சேதத்திற்கு உள்ளாக மறுபுறமுள்ள விவசாயிகளோ தங்களது பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் வாடி வருகின்றனர். வசிக்கும் ஊரிலேயே கண்ணுக்கெட்டிய தூரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் தங்களுக்கு எவ்வித பலனும் இல்லை என இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகவே, இந்த அவல நிலையினை போக்க உடனடியாக அத்திக்கடவு அவினாசி நிலத்தடி மேம்பாட்டு திட்டத்தினை செயல்படுத்துவது அவசியம் என்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள ஜீவநதிகளில் ஒன்றான பவானி நதி, நீலகிரிமலையின் மேல் பவானி என்னுமிடத்தில் உற்பத்தியாகி கேரளாவின் வனப்பகுதியான அமைதி பள்ளத்தாக்கு பகுதியினை கடந்து கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் வழியே தமிழகத்தினுள் பாய்கிறது. இங்குள்ள பில்லூர் அணையினை நிரப்பி பின்னர் ஈரோடுமாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையினையும் நிரப்பிய பின் காவிரியில் கலந்து கடலில் சங்கமிக்கின்றது. கோவை, திருப்பூர், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்களில் உள்ள பயிர்களுக்கு உயிர் கொடுக்கும் பவானிகோவை, திருப்பூர் போன்ற நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பருவமழை காலங்களில் அபரிமிதமான வெள்ளத்தால் இரு அணைகளும் நிரம்பிய பின் உபரி நீராக பாயும் தண்ணீர் கடலில் கலப்பதை தடுக்க, அரை நூற்றாண்டுக்கு முன்னர் தீட்டப்பட்டதே அவினாசி – அத்திக்கடவு திட்டம்.

பில்லூர் அணைக்கு வந்தடைந்த பின்னர் வீணாகும் உபரிநீரில் இரண்டு டி.எம்.சி அளவில்கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள மழைமறை பகுதிகளுக்கு திருப்பி அங்குள்ள ஐநூற்றுக்கும் மேற்பட்ட குளம், குட்டைகளை நிரம்புவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தை செயல்படுத்தக்கோரி பல ஆண்டுகளாய் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது தான் இத்திட்டத்தை மாற்றி அமைத்து இதனை துவக்குவதற்கான முதற்கட்ட நிதியும் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் மற்றும் அவினாசியின் பல்வேறு பகுதிகள் விடுபட்டுள்ளன. வறட்சி பாதிப்புள்ள அனைத்து பகுதிகளும் பயனடையும் வகையில் பழைய திட்டத்தின்படியே அத்திக்கடவு – அவினாசி திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகளால் முன்வைக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை கடல் மட்டத்திலிருந்து 424.22 மீட்டர் உயரத்தில் உள்ள நிலையில் இங்கிருந்து உபரி நீரை கடல் மட்டத்தில் இருந்து 161.73 உயரத்தில் தாழ்வான இடத்தில் உள்ள காளிங்கராயன் அணைக்கு கொண்டு சென்று பின்னர் மீண்டும் மேடானஇடத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அந்த உபரி நீரை மின்மோட்டார்கள் மூலம் புதிய திட்டத்தின்படி கொண்டு வருவது சாத்தியமற்றது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பழைய மற்றும் புதிய என இத்திட்டத்திற்கான பணிகள் எதுவும் இதுவரை முழுவீச்சில் துவக்கப்படவில்லை. கேரளக் காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதியினை நீர்பிடிப்பு பகுதிகளாக கொண்ட பில்லூர் அணை கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நிரம்பி வழிவதோடு, அணையில் இருந்து உபரிநீராக தினசரி வினாடிக்கு 14,000 கன அடி முதல் 57,000 கன அடி வரை பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாலேயே மேட்டுப்பாளையத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்க காரணமானது. அதே நேரத்தில் மற்றொரு பகுதி போதிய மழையோ நிலத்தடி நீரோ இன்றி வறட்சி பாதித்துள்ளது. எனவே வீணாகும் உபரி நீரை முறைப்படுத்தி இப்பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அனைத்து பகுதிகளும் பயன் பெரும் வகையில் மீண்டும் திருத்தியமைத்து விரைந்து செயல்படுத்துவது அவசியம் என்பதே அனைவரது எதிர்
பார்ப்பாக உள்ளது.

– இரா.சரவணபாபு

Leave a Reply

You must be logged in to post a comment.