சென்னை,
ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கு.ஜக்கையன் மீது உள்நோக்கத்துடன் பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீரமிக்க பங்களிப்பு செலுத்தியவர் மாவீரன் ஒண்டிவீரன். அவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 20 அன்று திருநெல் வேலியில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் மற்றும் நெற்கட்டான் செவலில் உள்ள நினைவிடம் ஆகிய இடங்களில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படியே இந்த ஆண்டும் வீரவணக்க நிகழ்வில் பங்கேற்க சென்ற ஆதித்தமிழர் கட்சி தலைவர் கு.ஜக்கையன் மற்றும் அக் கட்சியினர் காவல்துறையினரை தாக்க முயன்றதாக, கொலை முயற்சி உள்பட பிணையில் வெளிவரமுடியாத பல பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு என்ற பெயரால் பொதுநிகழ்வுகளை தடுக்கும் காவல்துறையின் நோக்கமே இதில் வெளிப்படுகிறது.

ஆயிரம் சைக்கிள்களோடு ஆளும் கட்சியினர் நடத்துகிற பேரணிகளுக்கு பாதுகாப்பு வழங்குகிற காவல்துறை, ஓரிரு வாகனங்களில் வருகிற அமைப்புகள் மீது அராஜகமான முறையில் வழக்குப் பதிவு செய்கிறது. கூட்டமாக வந்த ஒரே காரணத்திற்காக கொலை முயற்சி என்று வழக்குப் பதிவு செய்வது காவல்துறை அத்துமீறலின் உச்சம் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டிக்கிறது. மேலும் உடனடியாக வழக்கை திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: