புதுதில்லி:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 139.99 அடி வரையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வலியுறுத்தி கேரளாவைச் சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாகக் குறைக்க அணையை கண்காணித்த துணைக் குழுவும் மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரைத்திருந்தது.

கேரள அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முல்லைப் பெரியாறு அணையில் ஆகஸ்டு 15 ஆம் தேதி வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட்டதே வெள்ளத்திற்கு காரணம் எனவும் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக பராமரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்கும் துணைக் குழு கூடி, நீர்மட்டத்தை 139.99 அடியாக பராமரிக்குமாறு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாகவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் அணையின் கண்காணிப்புக் குழுக்கள் அளித்த பரிந்துரையை ஏற்று, ஆகஸ்ட் 31 வரை அணையின் நீர்மட்டத்தை 139.99 அடி வரையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணை செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: