தீக்கதிர்

அதிமுக பிரமுகர் வீட்டில் வெடி குண்டு வீச்சு…!

சிவகாசி;
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் அதிமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (38). அ.தி.மு.க. பிரமுகரான இவர் வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே இனிப்புக் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல, இரவு கடையைப் பூட்டி விட்டு ராஜபாண்டி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜபாண்டி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜபாண்டி வெடிகுண்டு வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் நாட்டு வெடிகுண்டுகளின் சிதறல்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.