தீக்கதிர்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைப்பு

தூத்துககுடி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே.வசிப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டு நிர்வாக பணிகளை வழக்கம் போல்  பார்க்க அனுமதி பெற்றது.  மேலும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு முடிவை ஏற்க மறுத்த தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மீண்டும் ஸ்டெர்லைட் பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இது தமிழக அரசுக்கு பெரிய பின்னடைவாக மாறியது.

இந்த நிலையில்  ஓய்வு பெற்ற  நீதிபதி நீதிபதி எஸ்.கே.வசிப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், இக்குழு ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்  என பசுமை தீர்ப்பாயம் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் இந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையிலேயே தீர்ப்பு அமையும் என்று கூறப்படுகிறது.