திருப்பூர்,
விலையில்லா ஆடுகளைப் பெற ஆகஸ்ட் 24ல் (இன்று) பயனாளிகளைத் தேர்வு செய்ய முதலாவது கிராம கூட்டம் நடத்தப்படும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமிகூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழனன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2018-19ஆம் நிதியாண்டில் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 15 கிராமங்களில் கிராமசபை மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்களைக் கொண்டு கிராமசபை கூட்டம் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஆகஸ்ட் 24 அன்று முதல் கிராமசபை கூட்டம் அந்தந்த கிராமங்களில் நடத்தப்படும். இதில் அந்தந்த கிராமங்களை சேர்ந்தோர் கிராமசபை குழு உறுப்பினர்களிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில், மிகவும் ஏழ்மையாக உள்ள குடும்பத்தின் பெண் உறுப்பினர் மட்டுமே பயனாளிகளாக தேர்ந்தெடுக்க தகுதி படைத்தவர். மேலும், அதே கிராமத்தில் நிரந்தர குடியிருக்கும் நிலமற்ற விவசாயத் தொழிலாளி, குடும்பத்தில் ஒருவர் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தற்போது சொந்தமாக மாடு, வெள்ளாடு, செம்மறியாடு வைத்திருக்கக் கூடாது. குடும்பத்தில் யாரும் அரசு மற்றும் பொதுத்துறை, கூட்டுறவு பணியாளராக இருக்க கூடாது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் பதவி வகிக்க கூடாது. அரசின் இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்தின் பயனாளிகளாக இருக்கக்கூடாது. இரண்டு ஆண்டுகளுக்கு ஆடுகளை விற்க கூடாது. இதில் 29 சதவிகிதம் ஆதிதிராவிடர், 1 சதவிகிதம் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தோர் தேர்வு செய்யப்படுவர்.

இதே திட்டத்தில் ஏற்கனவே பயனடைந்தோர் யாரும் இருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கு குட்டகம், எம்எஸ்வி பாளையம், கவுண்டச்சிபுதூர், கொங்கூர், கோட்டை மருதூர், இச்சிப்பட்டி, கேத்தனூர், மங்கலம், கொண்டம்பட்டி, நத்தக்காடையூர், மெட்ராத்தி, தீபாலப்பட்டி, கமலாக்குட்டை, நாகமநாயக்கன்பட்டி, கண்ணாங்கோயில் ஆகிய கிராமங்களில் விலையில்லா ஆடு பெறும் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.24ஆம் தேதி கிராம அளவிலான முதல் கூட்டமும், 27ஆம் தேதி கிராமசபைக் கூட்டமும், பயனாளி பட்டியல் இறுதி செய்யும் இரண்டாவது சிறப்பு கிராம சபைக் கூட்டம் செப்டம்பர் 3ஆம் தேதியும் நடத்தப்படும். தகுதியுடையோர் ஆகஸ்ட் 30க்குள் விண்ணப்பம் அளித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: