திருச்சிராப்பள்ளி:
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் முக்கொம்பு அணையில் இருந்து காவிரி ஆற்றில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் போக உபரி நீர் முழுவதும் கொள்ளிடம் அணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும்.

5 ஆண்டுகளாக டெல்டா பாசனத்திற்கே பற்றாக்குறையாக தான் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால் கொள்ளிடம் அணைக்கட்டில் தண்ணீர் திறக்கப்படாமல் அதில் உள்ள 45 மதகுகளும் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில் கர்நாடகாவில் பெய்த கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணையில் இருந்து 2.50 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் முழுவதும் முக்கொம்பு அணைக்கு வந்து அங்கிருந்து காவிரி ஆற்றில் 65 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 1.75லட்சம் கன அடியும் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து பெருக்கெடுத்த வெள்ளத்தால் கடந்த ஆக.19 ஆம் தேதி திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தின் ஒரு பகுதி உடைந்தது.

புதன்கிழமை 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு இருந்தது. ஏற்கெனவே பழுதாகி இருந்த மதகுகளில் அடுத்தடுத்து 7 மதகுகள் இடிந்து புதன் இரவு தண்ணீரில் மூழ்கின. வெள்ளத்தின் வேகத்தால் இரவு 10 மணிக்கு அடுத்தடுத்த மேலும் 2 மதகுகளும் இடிந்து விழுந்தன. 9 மதகுகளின் அடிப்பகுதிகள் உடைந்து ஆற்றில் மூழ்கி உள்ளன. இதனால் அணையில் தேங்கி இருந்த தண்ணீர் முழுவதும் ஆற்றில் வெளியேறி வருகிறது.
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மேலும் மதகுகள் உடைந்து ஆற்றில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதையடுத்து கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதகுகள் உடைப்பு பற்றி பொதுபணித்துறை முதன்மை செயலாளர் பிராபகர் முக்கொம்பு மேலணை பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், மதகுகள் உடைப்பால் எந்த ஆபத்தும் இல்லை என்றார்.

9 மதகுகள் இடிந்து விழுந்த தகவல் தெரிந்தவுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முக்கொம்பு பகுதியில் கொள்ளிடத்திற்கு தண்ணீர் திறந்து விட 45 மதகுகளும் காவிரிக்கு தண்ணீர் திறந்து விட 49 மதகுகளும் உள்ளன. சமீபத்தில் கூடுதல் தண்ணீர் கொள்ளிடத்திற்கு திறந்து விடப்பட்டதால் மதகுகள் சேதமடைந்து இடிந்துள்ளன. இதையடுத்து 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த பகுதியை கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. பருவமழை வந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

மேலும் ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு 12 மீட்டர் நீளம் 110 மீட்டர் அகலமுடைய தற்காலிக பில்லர்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ராட்சத இரும்பு தூண்கள், கான்கிரீட் தூண்கள், பனை சவுக்கு மரங்கள், மணல் மூட்டைகள் கொண்டு கட்டப்பட உள்ளன. 45 மதகுகளையும் ஆய்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து புதிய நிரந்தர பாலம் கட்டுவது குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் புதிய நிரந்தர மதகு பாலம் கட்டப்படும் என்றார்.

திருச்சி முக்கொம்பு அணையும், கொள்ளிடம் அணையும் கரூர் பைபாஸ் சாலை – சேலம் பிரதான சாலை ஆகியவற்றின் இணைப்பு பகுதியாக இருந்தன. அணைகளில் கட்டப்பட்டிருந்த பாலம் இலகுரக வாகனங்களின் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டிருந்தது. 2 சாலைகளில் உள்ள குணசீலம், வாத்தலை உள்பட 10த்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். புதன்கிழமை இரவு கொள்ளிடம் அணை பாலம் உடைந்ததால் கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் நாளை வருகை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆக.24 காலை (வெள்ளிக்கிழமை) 7 மணியளவில் திருச்சி முக்கொம்பு மேலணையை பார்வையிட வருகிறார். அவர் அணையை பார்வையிட்ட பின்னர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். (நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.