சென்னை,
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வேளாண் கல்லூரி பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு தலைவர் ஏ.டி. கண்ணன், மாநில செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் அமைந்துள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு பயின்று வருகிற மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி பாலியல் விருப் பத்திற்கு இணங்கிப் போகுமாறு கல்லூரி பேராசிரியர் தங்கபாண்டி வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி விடுதி உதவி காப்பாளர் புனிதாவிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள் ளார். அப்புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, மாணவியை மிரட்டிய பேராசிரியர் தங்கப்பாண்டியனுடன் இணங்கிப்போகுமாறு அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். பேராசிரியர் தங்கபாண்டியனுக்கு பெரிய இடங்களில் எல்லாம் தொடர்பு இருக்கிறது, அவர் சொல்வதை கேட்டு, இணங்கிப் போனால் வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு சென்று விடலாம் என்று பாலியல் வன்கொடுமை நிகழ்வதற்கு வலியுறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கல்லூரி முதல்வர் இராஜேந்திரனிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். புகாரை படித்துப் பார்த்துவிட்டு, கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவே புகார் அளிக்கிறாயா என்று மாணவியை அவர் மிரட்டியதோடு மட்டுமல்லாது, புகாரை கிழித்தெறிந் துள்ளார்.

இதற்கிடையே மாணவியிடம் விடுதி காப்பாளர் புனிதா மற்றும் மைதிலி ஆகியோர் டிஜிபி-யிடம் புகார் அளித்தாலும் எங்களை எதுவும் செய்துவிட முடியாது. நீ மிடில் கிளாஸ் தான், நாங்கள் எல்லாரும் பெரிய இடம், ஆகவே பேராசிரியரின் பாலியல் இச்சைக்கு இணங்கிப் போ, இல்லையென்றால் உன்னைக் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.  இவர்களது மிரட்டல்களை தனது செல்போனில் மாணவி மறைமுகமாக பதிவு செய்துள்ளார். இதைக் கண்டறிந்த மேற்கண்ட பேராசிரியர்கள் செல்போனையும், அதிலிருந்த ஆதாரங்களையும் அழித்துள்ளனர். மேற்கண்ட மாணவி தனது மாதவிடாய் காலத்தில் கழிவறைக்கு அடிக்கடி சென்று வந்ததைக் கவனித்த விடுதி காப்பாளர் புனிதா, உன்மேல் சந்தேகமாக இருக்கிறது. டாக்டரிடம் வா என்று ஆண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று மாணவியை பரிசோதித்துள்ளார்.பாலியல் விருப்பத்திற்கு உடன் பட மறுத்த மாணவியை பழிவாங்கும் நோக்கத்தில் செல்போன் திருடியதாக பொய்க் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இதற்கிடையே, மாணவிகள் விடுதியில் காப்பாளர் புனிதா மற்றும் மைதிலி உதவியுடன் தங்கபாண்டியன் மாணவியின் அறையில் நுழைந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் வேறுவழியின்றி மேற்கண்ட சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.  ஆனால், கல்லூரி பெயர் கெட்டுவிடும் என்று கூறி இப்பிரச்சனையை மூடி மறைக்கும் நோக்கத்துடன் கல்லூரி நிர்வாகத்தினர் பெற்றோருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேற் கண்ட பிரச்சனையை கேள்விப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி தாமாக முன்வந்து, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர் மற்றும் விடுதிகாப்பாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். முதல்கட்ட விசாரணையில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு தள்ள முயற்சித்த நிர்மலா தேவி பிரச்சனை முடிவதற்குள் அரசு வேளாண் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்துள்ள பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசும், காவல்துறையும் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மேலும், பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர்களை பணிநீக்கம் செய்து, கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் நாடு மாநிலக் குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.