தீக்கதிர்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: விடுதியில் நீதிபதி நேரில் விசாரணை…!

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொந்தரவு  கொடுத்தது தொடர்பாக மாவட்ட நீதிபதி கல்லூரி விடுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூர் கிராமத்தில் அரசு வேளாண் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு, இரண்டாமாண்டு படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரி பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.அந்த மாணவிக்கு கடந்த 7 மாதங் களுக்கு மேலாக பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது பெற்றோர் கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் புகார் கூறினர்.

அப்போது, பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியருக்கு ஆதரவாக மிரட்டல் விடுக்கும் விடுதி வார்டன்கள் இருவரின் உரையாடலையும் வெளியிட்டனர். மேலும், பாலியல் தொந்தரவுக்கு ஆளான கல்லூரி மாணவி மாவட்ட நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக புகாரளித்தார். அவரிடம், மாவட்ட நீதிபதி மகிழேந்தி தனியாகவும் விசாரணையும் நடத்தினார்.

நீதிபதி பேட்டி
இதுகுறித்து மாவட்ட நீதிபதி மகிழேந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது “இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் பல்கலைக்கழகத்தின் தரம் எந்தளவுக்கு தாழ்ந்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். பாதிக்கப்பட்ட மாணவி வேளாண் கல்லூரியில் சேர்ந்து படிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் மற்றும் அவருக்கு உதவிய பெண் உதவி பேராசிரியர்கள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது
தொடர்பாக மக்கள் நீதிமன்றம் சார்பில் கல்லூரியில் உரிய விசாரணை நடத்தப்படும். பாதிக்கப்பட்ட மாணவியின் மீது வீண்பழி சுமத்துவது கல்லூரி நிர்வாகம் மீது சேற்றை பூசிக்கொள்வதற்கு சமம்” என்றார்.

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு கூறிய மாணவிக்கு எதிராக கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் சில விவரங்களை கூறியிருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த உள்ளது. தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மிரட்டல் ஆடியோ
கல்லூரி மாணவி தரப்பில் செல்போன் ஆடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் உதவி பேராசிரியருக்கு ஆதரவாக பெண் உதவி பேராசிரியைகள் இருவர் மாணவியை தனியாக அழைத்து மிரட்டுகின்றனர். சுமார் 7 நிமிடங்கள் நடக்கும் இந்த உரையாடல் பதிவில், “மரியாதையாக உனது அம்மா, அப்பாவை அழைத்து வந்து மன்னிப்பு கேட்டால் படிப்பை தொடரலாம். இல்லாவிட்டால் பல்கலைக்கழகத்தின் எந்த கல்லூரியிலும் படிக்க முடி யாது. பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளரிடம் பேசிவிட்டோம். உனக்கு எதிரான எல்லா ஆதாரங்களையும் தயார் செய்து விட்டோம். இதெல்லாம் சின்ன விஷயம். டிஜிபியே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. புகார் கொடுத்து உன் வாழ்க்கையை தொலைத்து விடாதே. அதை விட்டுவிட்டு எங்களுக்கு எதிராக செயல்பட்டால் நாங்களும் எல்லா திட்டத்தையும் செய்து விட்டு வந்துவிட்டோம்” என்ற உரையாடல் பதிவாகியுள்ளது.

தாழ்ப்பாள் இல்லாத விடுதி அறை
பேராசிரியர், கல்லூரி மாணவியின் புகாரைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி மகிழேந்தி, வேளாண் கல்லூரியில் நேரில் விசாரணை நடத்தினார். கல்லூரி முதல்வர், பேராசிரியர், உதவி பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
விடுதியில் மாணவி தங்கியிருந்த அறையை ஆய்வு செய்த நீதிபதி, அந்த அறைக் கதவில் தாழ்ப்பாள் இல்லாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். விசாரணையின்போது மாணவி தொடர்பான ஆவணங்களை அளிக்க கல்லூரி நிர்வாகத்தினர் மறுத்துவிட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த நீதிபதி மகிழேந்தி, இன்னும் விசாரணை நிறைய இருக்கிறது எனக்கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த விசாரணையின்போது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுமதி சாய்பிரியாவும் உடனிருந்தார்.

இதற்கிடையே வேளாண் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் மற்றும் விடுதி வார்டன்களை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.