உடுமலை,
திருமூர்த்தி அணையிலிருந்து 2ம் மண்டல பாசனத்துக்கு வியாழனன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்மூலம் 94,350 ஏக்கர் நிலம் பாசனம் வசதி பெறும்.

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி பாசன திட்டத்தில் 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதை நான்கு மண்டலங்களாக பிரித்து, ஒரு மண்டலத்துக்கு சுமார் 94 ஆயிரம் வீதம் பயன் பெறுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்ததால், பிஏபி தொகுப்பு அணைகள் நிரம்பின. இதனால், பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாய் வழியாக அணைக்கு தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் 57.5 அடியை தாண்டி நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதலாம் மண்டலத்துக்கு கடைசி சுற்று தண்ணீர் விநியோகம் கடந்த 17ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து. 2ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற தமிழக முதல்வர் 23ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில், அணைக்கு தொடர்ந்து 1000 கனஅடி மேல் தண்ணீர் வந்ததால் உபரிநீரை உப்பாறு ஓடைக்கு திறந்து விடப்பட்டன.

இதைத்தொடர்ந்து, 2ம் மண்டல பாசனத்துக்கு பிஏபி பிரதான கால்வாயில் வியாழனன்று காலை 7 மணியளவில் திறந்து விடப்பட்டது. இதில் வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது. மேலும், உரிய இடைவெளிவிட்டு 5 சுற்று தண்ணீர் வழங்கப்பட உள்ளது. மொத்தம் 135 நாட்களுக்கு 950 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் 94,350 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

Leave A Reply

%d bloggers like this: