திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேல் அணையின் 8 மதகுகள் உடைந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதையடுத்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் திருச்சியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இந்த முக்கொம்பு உள்ளது. இங்கிருந்துதான் காவிரி ஆறு காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. கொள்ளிடம் ஆறு காவிரியின் வட புறமாகப் பாய்கிறது. காவிரியின் தென்புறம் முக்கொம்பும், வடபுறம் வாத்தலையும் உள்ளன.

180 ஆண்டுகள் பழமையான இந்தப்பாலம் திருச்சி மாவட்டத்தின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தற்போது, கர்நாடகாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளத்தின் காரணமாக முக்கொம்பு மேல் அணையின் 8 மதகுகள் உடைந்துள்ளன. இதனால், ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுப்பணித்துறை வசமுள்ள இந்தப் பாலத்தை முறையாகப் பராமரிக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பாலம் இடிந்து விழுந்துள்ளதால், முக்கொம்பு மேல் அணை பாலம் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாலம் இடிந்த பகுதியை திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, வருவாய் கேட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ராசாமணி, “காவிரிப் பாலம் பாதுகாப்புடன் இருக்கிறது, கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை இல்லை. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்படும். காவிரியில் 32,000 கனஅடி நீரும், கொள்ளிடத்தில் 8,000 கனஅடி தண்ணீரும் கிளை வாய்க்காலில் 1000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளன’’ என்று கூறினர்.

Leave A Reply

%d bloggers like this: