சேலம்,
சேலம் அரசு கலைக்கல்லூரியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடத்தை டி.கே.ரங்கராஜன் எம்.பி. வியாழனன்று திறந்துவைத்தார்.

சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மனித உரிமைகள் துறை கட்டிட திறப்புவிழா நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய கட்டிடத்தை மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் திறந்து வைத்தார். அதன்பின் அவர்பேசுகையில், எனது தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகமாக கல்வி நிறுவனங்களுக்கே வழங்கியுள்ளேன். அந்த பணம் மக்களின் பணம்,மக்களுக்கு நேரடியாக செலவு செய்ய வேண்டியது எனது கடமை. குறிப்பாக அவைகல்வி நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் கல்வி நிலையங்களுக்கு நிதியை அளித்து வருகிறேன். இதற்கு அடுத்து சுகாதாரம், நிழல்கூடம் உள்ளிட்டவைகளுக்கு செலவு செய்யப்படுகிறது. நான் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சியில் விவாதிக்கப்பட்டு பின் முறையாக எனக்கு பரிந்துரைக்கப்பட்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தவறுகள் ஏற்படாமல் பல வழிமுறைகளை கடந்துதான் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆகவே, தொடர்ந்து இந்த கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், விஞ்ஞான தொழில் நுட்பத்திற்கு ஏற்ற வகையில் கல்வி அமைய வேண்டும். இருபதாம் நூற்றாண்டை கடந்து 21 ஆம் நூற்றாண்டிற்கு மாணவர்கள் வந்து விட்டார்கள். அவர்களை போல் ஆசிரியர்களும், மாணவர்களின் வேகத்திற்கு ஏற்ப கற்பிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் இந்தியா வளரும் நாடாக இருக்க முடியாது. தமிழகத்திற்கு ஒரு சிறப்புள்ளது. சமூக சீர்திருத்தவாதிகள் அதிகம் தோன்றியுள்ள மண் தமிழகம். அவர்களின் கருத்துக்கள் இங்கு ஆழமாக உள்ளது. வடநாட்டில் இது குறைவு. இங்கு வரலாறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டவர்களின் கருத்துகள் தென்னகத்தில் மேலோங்கியுள்ளது.

நாட்டில் 800 பல்கலைக்கழகங்கள், 40 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. இன்று கல்வி பல சவால்களை சந்தித்து வருகிறது. தற்போது ஏற்படும் சவால்கள் என்னவென்றால் 60 ஆண்டு காலமாக இருந்த திட்டங்கள் மாற்றப்படும் நிலை உள்ளது. பல்கலைக்கழக மானிய குழு கலைக்கப்படும் சூழலும் இதில் அடக்கம். உலகின் அனைத்து நாடுகளிலும் கல்வி என்பது விவாத பொருளாக மாறி உள்ளது. தேர்வு முறையில் ஊழல் காணப்படுகிறது. இது இப்படி இருக்க இந்தியா எப்படி வளமான நாடாக மாற முடியும். இது அரசியல்வாதிகளின் கவலையாக உள்ளது மட்டுமல்லாமல், சமூகத்தின் கவலையாக மாற வேண்டும். அப்படி மாறினால் இது மாறும். ஆசிரியர்கள் அறிவுஜிவிகளாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு எழும் அனைத்து பிரச்சனைகளிலும் பங்கெடுக்க வேண்டும். மேலும், அரசியல்வாதிகளின் கருத்துக்களை ஏற்காத மாணவர்கள், ஆசிரியர்களின் கருத்துக்களை ஏற்பார்கள். நான் எம்.பி.யாக, அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் பிரச்சனைகள் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்டுபிரச்சனைகளில் நீதிமன்றம் செல்லும்போது இவர் யார்? இவருக்கும் இந்த பிரச்சனைகளுக்கும் என்ன சம்மந்தம் என சில வழக்கறிஞர்கள் கேட்பார்கள். ஆனால், சமூக மாற்றத்திற்கு அனைத்து பணிகளையும் செய்ய வேண்டியது எனது கடமை என நினைத்து அதை செய்கிறேன்.

குறிப்பாக, நீட் தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும். உயர்ந்த ஆங்கில வழி கல்வி பயின்ற மாணவர்களும், அரசு பள்ளியில் குறைந்த ஆங்கில புலமை மற்றும் கல்வி முறை பயின்ற மாணவர்களும் ஒரே மாதிரியாக நீட் தேர்வு எழுத சொல்வது எப்படிநியாயம். கல்வி ஒரே முறையில் இருந்தால் தான் இது சாத்தியம். இருப்பினும் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களின் 46 வினாக்கள் தவறாக இருந்துள்ளது. இதற்காகநீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது என அவர் தெரிவித்தார்.மேலும், சேலம் அரசு கல்லூரியில் மேலும் சில கட்டிடங்கள் கட்டகோரிக்கை வைக்கப்பட்டது. அதுகுறித்து பரிசீலிக்கப்படும். தற்போது டிஜிட்டல் உலகில் நாம் பயணிப்பதால், மாணவர்கள் கற்றலை அதிகரிக்க டிஜிட்டல் நூலகம் அமைக்க முயற்சிக்கலாம் எனவும் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ப.முத்துசாமி வரவேற்புரையாற்றினார்.

தமிழ்துறை தலைவர் முனைவர் சீ.குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார். மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.உதயகுமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.பன்னீர்செல்வம், பொன்.ரமணி உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். முடிவில், மனித உரிமைகள் துறை தலைவர் பேராசிரியர் கு.ரகு நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.