ஈரோடு,
கேரளா மாநில வெள்ளநிவாரண பொருட்கள் அனுப்புவதால் சென்னிமலை போர்வைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் போர்வை உற்பத்தியில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் 30க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெசவாளர் கைத்தறி போர்வை உற்பத்தி செய்கின்றனர். 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள் மூலமும் போர்வைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடக்கிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் தான் முதல் சீசன் தொடங்கி விற்பனை அதிகரிக்கும். தற்போது கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் இருந்து போர்வைகளை வாங்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சென்னிமலையில் கூடியுள்ளனர்.

தமிழக அரசும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மூலம் கூட்டுறவு சங்கம் மூலம் உற்பத்தியாகும் போர்வைகளை ஒட்டு மொத்தமாக வாங்கி வெள்ள நிவாரணப் பொருட்களோடு அனுப்பி வருவதால் சென்னிமலை போர்வைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் இரவு, பகல் பாராது நெசவு மேற்கொண்டு வருகின்றனர். வெளி மாநில போர்வைகளை விட சென்னிமலை போர்வைகள் விலை குறைந்தும், தரம் அதிகரித்தும் இருப்பதால் 90 சதவீத போர்வைகள் இங்கிருந்து தான் விற்பனையாகிறது. தற்போது ரூ.100 முதல் ரூ.250 வரை தரம் வாரியாக போர்வைகள் விற்கப்படுவதால் முன்பதிவுகள் அதிக அளவில் குவிந்துள்ளதாக நெசவாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.