கோவை,
கோவையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துணிகரமாக நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், இருகூர் தீபம் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சத்திய வள்ளி (52). இவர் புதனன்று காலை தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சத்தியவள்ளி அணிந்திருந்த 3 பவுன் நகையை திடீரென பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நகையை பறிக்க விடாமல் போராடியபோதும் அவரால் தடுக்க முடியவில்லை. இதனையடுத்து கொள்ளையர்கள் நகையை பறித்துக் கொண்டு வாகனத்தில் தப்பித்து சென்றனர். இதுகுறித்து சத்திய வள்ளி சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பின் காவல்துறையினர் சம்பவஇடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் நகை பறித்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்களில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருவர் வருவதும், அதில் பின்னால் உட்கார்ந்து இருந்தவர் கீழே இறங்கி சத்திய வள்ளியிடம் வழி கேட்பது போல் நடித்து நகையை பறிக்கும் காட்சியும் பதிவாகி உள்ளது.இந்த காட்சிகளை வைத்து நகையை பறித்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: