ஈரோடு,
காவிரி உபரிநீரை அந்தியூருக்கு கொண்டு வந்து குடிநீர் பஞ்சத்தை போக்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தியூரில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குருசாமி, ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துச்சாமி, தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் நாகராஜா, சிபிஐ ஏ.ஜி.நடராஜ், மதிமுக மாவட்ட துணை செயலாளர் கொ.ராமன், விசிக ஒன்றிய செயலாளர் கு.தங்கராஜ் உள்ளிட்ட அரசியல் கட்சி மற்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் “காவிரி உபரிநீரை மேட்டூரில் இருந்து அந்தியூர் பகுதிக்கு கொண்டு வந்து ஏரி, குளம்,குட்டைகளை நிரப்பி, மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்கி நிலத்தடிநீர் ஆதாரத்தை உயர்த்தும் திட்டத்தை” தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், இக்கோரிக்கையை முன்னிருத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என்றும். முதற்கட்டமாக ஆக.25 ஆம் தேதியன்று (சனிக்கிழமை) அந்தியூரில் கவன ஈர்ப்பு ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தீக்கதிர் செய்தி எதிரொலி
முன்னதாக, அந்தியூர் மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி உபரிநீரை மேட்டூரில் இருந்து அந்தியூர் பகுதிக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஞாயிறன்று (ஆக.19) தீக்கதிர் நாளிதழில் “கடலில் கலக்கும் காவிரிநீர், காய்ந்துள்ள பக்கம் வருமா?” என்ற தலைப்பில் செய்தி கட்டுரை வெளியாகி இருந்தது என்பதும், அதன் தொடர்ச்சியாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்காகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.