கோவை,
கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கின் காரணமாக ஊழியர் ஒருவர் உயிரிழந்ததற்கு நீதி கேட்டு வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் வட்டாரத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வந்தவர் ரங்கராஜன். இதே மண்டலத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றும் திட்ட இயக்குனரான ஆனந்தராஜ் என்பவர் தொடர்ந்து ஊழியர் விரோத போக்கு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தினாலும் சட்ட விதிகளுக்கு எதிராக பணி விடுவிக்கப்பட்டு பல மாதங்களாக ஊதியம் வழங்காததால் மன உளைச்சல் அடைந்த ரங்கராஜ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் மரணத்திற்கு காரணமான திட்ட இயக்குனர் ஆனந்தராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு உறுதுணையாக இருந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒருபகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொறுப்பாளர் ஷாஜூ, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வே.செந்தில்குமார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: