கோவை,
சாக்கடையில் ஓடும் கழிவு நீரை வீட்டிற்குள் கொண்டு வந்துசேர்க்கும் வகையில் கடமைக்கு கட்டப்பட்டுள்ள சாக்கடை கால்வாயை கண்டு அரசு ஊழியர் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

கோவையின் மையப்பகுதியான பந்தய சாலையில் அரசு ஊழியர்களின் குடியிருப்புகள் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அக்குடியிருப்பு வாசிகளின் சிரமங்கள் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் புதிதாகசாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. அதேநேரம், இந்த கால்வாய் போதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் கடமைக்கு கட்டப்பட்டுள்ளதாக அரசு ஊழியர் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாக்கடையில் கலக்கும்படி இல்லாமல், சாக்கடையில் ஓடும் கழிவு நீர் வீட்டிற்குள் செல்லும் வகையில் உயரமாக கட்டப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் கழிவுநீர் வீட்டிற்குள் புகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பு வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த சாக்கடை கால்வாய் தற்போதுதான் கட்டப்பட்டுள்ள நிலையில், அறைகுறையான பணியின் காரணமாக பல இடங்களில் இடிந்துள்ளதை அப்பகுதியினர் சுட்டிக்காட்டுகின்றனர். இதேபோல், இப்பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியானது பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாததால் கொசு வளர்க்கும் பண்ணையாக மாறியுள்ளது. இதனால் மாலை நேரம் வந்து விட்டாலே கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விளக்கமறிய வீட்டுவசதித்துறை அதிகாரியை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றபோது அவர் இணைப்பில் கிடைக்கவில்லை. ஆகவே, அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் உள்ள அவலத்தை களைய உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(ந.நி)

Leave A Reply

%d bloggers like this: