மதுரை:
தூத்துக்குடி குமரகிரி பகுதியில் உள்ள உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கந்தக ரசாயன கழிவுகளை எட்டு வாரத்தில் அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த காந்திமதிநாதன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
உப்பாற்று ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, குமரகிரி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை ரசாயனக் கழிவுகள் ஓடையில் கொட்டப்பட்டிருந்ததால், தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்டம் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான உப்பாற்று ஓடையில் புதுக்கோட்டை பாலத்திற்கு அருகே மேல்புறம் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் கொட்டி வைக்கப்பட்டுள்ள இரசாயனக் கழிவுகளை முழுமையாக அகற்றாமல், ஓடையில் உள்ள மண்ணை மட்டும் எடுத்து வியாபார நோக்கோடு முறைகேடாகக் கடத்தி விற்பனை செய்து வருவதைத் தடுத்து நிறுத்தவேண்டும், ஓடையின் அருகில் உள்ள இதர ஆக்கிரமிப்புகளையும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இரசாயனக் கழிவுகளையும் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.
இந்த உப்பாற்று ஓடையில் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்குப் பருவ மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்போது  உப்பாற்று ஓடை, புதுக்கோட்டை பாலம் அருகே ஸ்டெர்லைட் நிறுவனத்தால் கொட்டப்பட்ட ரசாயனக் கழிவுகள் மலைபோல் குவிக்கப்பட்டு, வெள்ளப் பெருக்கு ஓடைக்கு வரவிடாமல் தடுத்ததால் ஊருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தூத்துக்குடி மாநகரமே மூழ்கியது. அதனால் இந்த ரசாயனக் கழிவுகளை அப்புறப்படுத்தவும், பொதுப்பணித்துறை கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்டத்திற்கு உட்பட்ட உப்பாற்று ஓடையை முழுமையாகத் தூர்வாரிடவும் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து உப்பாற்று ஓடையைச் சீரமைப்பதற்கு அரசிடம் கோரப்பட்ட நிதி ஆதாரம் கிடைக்கப் பெறுவதற்கு முன்னரே, பருவமழை தொடங்கிவிட்டாலும் மழையளவு வெகுவாக குறைந்து விட்டது’ என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு வியாழனன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி குமரகிரி பகுதியில் உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கந்தக ரசாயனக் கழிவுகளை எட்டு வாரத்தில் அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.