புதுதில்லி:
பணமதிப்பு நீக்கத்தை கொண்டு வந்த பிரதமர் மோடி, ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைக்கவும், ஆன்லைன் மூலமான டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கவுமே, இதனைச் செய்ததாக தெரிவித்தார். குறிப்பிடத்தக்க அளவிற்கு, டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்வர்களுக்கு பரிசுகளையும் அறிவித்தார். ‘பீம் ஆப்’ என்ற செயலியையும் அறிமுகம் செய்தார்.
ஆனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிகமாகக் கொண்ட நாட்டில், மிகக்குறைந்த தனிநபர் வருவாயைக் கொண்ட மக்கள் – பரிவர்த்தனைக்கே வாய்ப்பில்லாத நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனைக்கு எங்கே செல்வார்கள்? மற்ற திட்டங்களைப் போல, மோடியின் இந்த திட்டமும் படுதோல்வி அடைந்தது.

இதுஒருபுறமிருக்க, இந்திய மக்கள் பொதுவாக ஆன்லைன் பரிவர்த்தனையையே விரும்புவதில்லை என்று ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது, ஆன்லைனில் முதல் தடவை பொருட்களை வாங்கிய 54 மில்லியன் இந்தியர்கள், அதற்குப் பிறகு ஆன்லைன் வர்த்தகத்தின் வழியாகப் பொருட்களை வாங்கவே இல்லை என்று கூகுள், கன்சல்டன்ட்ஸ் பெயின் – கம்பெனி மற்றும் ஒமிதியார் நிறுவனங்களின் ஆய்வு தெரிவித்துள்ளது.
“ஆன்லைன் வர்த்தகத்தின் வாயிலாகப் பொருட்கள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது போல தெரிந்தாலும், கடந்த 12 மாதங்களில் 54 மில்லியன் (5 கோடியே 40 லட்சம்) பேர் ஒருமுறை மட்டுமே ஆன்லைன் வழியாகப் பொருட்களை வாங்கியுள்ளனர்; பொருட்களை வாங்க இவர்கள் மீண்டும் ஆன்லைன் வலைதளங்களைப் பயன்படுத்தவே இல்லை.இதனால் இந்திய ஆன்லைன் வர்த்தகத்தின் ஒட்டுமொத்த மதிப்பில் 50 பில்லியன் டாலர் அளவுக்குச் சரிந்துள்ளது; ஒருமுறை மட்டுமே ஆன்லைன் வர்த்தகம் மேற்கொண்டுள்ளவர்களை ஆராயும்போது பெரும்பாலும் அவர்கள் குறைந்த ஊதியம் பெறுபவர்களாகவும், முதன்முறையாக இணையதளம் பயன்படுத்த ஆரம்பித்து இருப்பவர்களுமாகவே உள்ளனர்; இவர்கள் ஆங்கிலத்தைக் காட்டிலும், வட்டார மொழிகளையே நன்கு அறிந்துள்ளனர்; மேலும், இந்தியாவில் தற்போதைய நிலையில் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் விகிதமும், ஆன்லைனில் பொருட்களை வாங்குவதைக் கைவிடுவோர்களின் விகிதமும் 1:1 என்ற சமநிலையில் இருக்கின்றன.” என்று கூகுள், கன்சல்டன்ட்ஸ் பெயின் – கம்பெனி மற்றும் ஒமிதியார் நிறுவனங்களின் ஆய்வுகள் கூறுகின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.