தீக்கதிர்

வாஜ்பாய், மோடிக்கு ஒரு நியாயம் சித்துவுக்கு வேறொரு நியாயமா?பாஜக-வுக்கு சத்ருகன் சின்ஹா கேள்வி..!

பாட்னா;
பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதியை கட்டித் தழுவிய விவகாரத்தில், காங்கிரஸ் அமைச்சர் சித்துவுக்கு, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹா ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சியில், அவரின் அழைப்பின்பேரில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். அப்போது, விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்த சித்துவை, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர்ஜாவத் பஜ்வா வரவேற்றுக் கட்டித் தழுவியதுடன் அவருடன் சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

இந்த சம்பவத்தை வைத்து, சித்துவை தேசத்துரோகியாக்க பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. சித்து மீது வழக்கும் போட்டுள்ளது. பஜ்ரங் தள் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சித்து தலைக்கு ரூ. 5 லட்சம் விலையும் அறிவித்துள்ளார்.இந்நிலையில், சித்து-வுக்கு பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சத்ருகன் சின்கா ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள சத்ருகன் சின்ஹா, “நமது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது பாகிஸ்தான் பயணத்தின்பொழுது அந்நாட்டு பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை கட்டி தழுவினார்; நமது பிரதமர் மோடியும் தனது பாகிஸ்தான் பயணத்தின்பொழுது அந்நாட்டு பிரதமர் ஷெரீப்பை கட்டி அணைத்துள்ளார்; சித்துவும் இந்த விவகாரத்தில் தனது தரப்பு விளக்கத்தை தெளிவுடன் கூறிவிட்டார்; அதனால் இந்த விவகாரம் இத்துடன் முடிந்து போய் விட்டது” என்று தெரிவித்துள்ளார்.