தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசாங்கம் சில முக்கிய பேருந்து நிலையங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது என முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மோடி ஆட்சியின் மகுடிக்கு ஆடுகின்றபாம்பாக உள்ள எடப்பாடி அரசாங்கம் தனியார்மயத்திலும் மோடி ஆட்சியை பின்பற்றுகிறது.திருத்தணி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தர்மபுரி, நாமக்கல், மயிலாடுதுறை, திண்டிவனம் ஆகிய ஊர்களின் பேருந்து நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்க எடப்பாடி அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோக துறை சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விவரம்அடங்கிய ஆவணம் எந்த வலைதளத்திலும் இல்லாமல் மறைத்துள்ளனர்.

உலக வங்கியின் கட்டளையா?

பேருந்து நிலையங்கள் தற்சமயம் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. மேற்கண்ட ஏழு பேருந்து நிலையங்களும் நகராட்சி நிர்வாகத்தின் கீழ்உள்ளன. நகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத சூழலில் இத்தகைய கொள்கை முடிவுகள்எடுப்பது மக்கள் விரோதச் செயல். தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக எந்த விவாதங்களும் கருத்துக் கேட்பும் இல்லாமல் எடப்பாடி அரசாங்கம் தானடித்த மூப்பாக தனியாருக்கு ஆதரவாகச் செயல்படுவது பல்வேறு ஐயப்பாடுகளை உருவாக்குகிறது. கோவையில் தண்ணீர் விநியோகம் தனியாருக்குத் தந்த கையோடுஇந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவை இரண்டிலுமே ஒரே அமைச்சர் சம்பந்தப்பட்டிருப்பது தற்செயல்தானா எனும் கேள்வியும் எழுகிறது. தமிழக அரசாங்கம் உலக வங்கியின் வழிகாட்டுதல்படி “தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியகம்” (TNUDF) எனும் அமைப்பை உருவாக்கியுள்ளது. இதில் தமிழக அரசாங்கத்துடன் ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் எச்.டி.எஃப்.சி. வங்கிகளும் ஐ.எல்.எஃப்.எஸ். எனும் தனியார்நிதி நிறுவனமும் பங்குதாரர்களாக உள்ளன. இந்த அமைப்பின் மூலம் உலக வங்கி, ஜெர்மனியின் கே.எஃப். டபிள்யூ. (KFW) வங்கி மற்றும் ஜப்பான் நிதி நிறுவனங்களிடமிருந்து சுமார் ரூ.5300 கோடியை தமிழக அரசாங்கம் கடனாக பெற்றுள்ளது. இத்தகைய நிதி உதவி பெறும் பொழுது மக்கள் நலனை கருத்தில்கொண்டு வலுவான அரசியல் நிலைபாடு எடுக்காவிட்டால் இந்த அமைப்புகளின் மக்கள் விரோத முடிவுகளுக்கு மாநில அரசாங்கங்கள் உட்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடும்..தமிழகம் குறித்து உலக வங்கி தனது வழிகாட்டுதல் அறிக்கையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:“குடிநீர் விநியோகம், சாக்கடைகள் கட்டுதல் மற்றும் பேருந்து நிலையங்கள் உருவாக்குதல் ஆகியவற்றில் உபயோகிப்பாளர்கள் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும். இவற்றை உருவாக்கும் செலவு மட்டுமல்ல; பராமரிக்கும் செலவையும் உபயோகிப்பாளர்களிடம் பெறுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.”

உலக வங்கி 2015 அறிக்கை

மோடி அரசாங்கத்தை எதிர்ப்பதற்கே வலுவில்லாத எடப்பாடி அரசாங்கம் உலக வங்கியை எப்படி எதிர்க்கும்? எனவே பேருந்து நிலையங்களையும் குடிநீர்வினியோகத்தையும் தமிழக அரசாங்கம் தனியாருக்குத் தாரை வார்க்கிறது.

தனியார்மயத்திற்கு ஆதரவான வாதங்கள்:-

பேருந்து நிலையங்களை தனியாருக்குத் தருவது தமிழகத்தில்தான் புதியது. நாட்டின் பல இடங்களில் அவ்வாறு தரப்பட்டுள்ளது என வாதிடப்படுகிறது. இது முழு உண்மை அல்ல. ஒரு சில இடங்களில்தான் தனியாரிடம் தரப்பட்டுள்ளது. அதுவும் பெரும்பாலும் பா.ஜ.க.ஆளும் மாநிலங்களில்தான் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான பேருந்து நிலையங்களை அரசு அமைப்புகள்தான் நிர்வாகம் செய்கின்றன. உதாரணத்திற்கு பெங்களூரு நகரில் மெஜஸ்டிக், சாந்தி நகர், சிவாஜிநகர் போன்ற மிகப் பெரிய பேருந்துநிலையங்களை மாநகர போக்குவரத்து கழகம்தான் நிர்வகித்து பராமரிக்கிறது. அதே போல ஹைதராபாத் நகரில் உள்ள மிகப்பெரிய மகாத்மா காந்தி பேருந்துநிலையத்தை தெலுங்கானா போக்குவரத்து கழகம்தான் பராமரிக்கிறது. இதே நிலைதான் கேரளா முழுதும் உள்ளது.புதிய பேருந்து நிலையங்களை உருவாக்க நிதி ஆதாரம் இல்லை எனும் ஒரு கருத்தையும் அரசாங்கம் கூறுகிறது. உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தாத காரணத்தால் தமிழகம் ரூ.3000 கோடி நிதியை இழந்துள்ளது.இது யாருடைய தவறு? இந்த நிதி இருந்தால் பல பேருந்து நிலையங்களை உருவாக்க இயலுமே!

பாதிப்புகள் யாருக்கு?

பேருந்து நிலையங்கள் தனியாரிடம் தந்தால் என்ன ஆகும்? அங்குள்ள கடைகளை ஏலம் விடுவதன் மூலம் வருவாய் கிடைக்கிறது. தனியார் இந்த ஏலத் தொகையைஅதிகப்படுத்துவர். இதனால் ஏலம் எடுப்பவர்கள் அந்த அதிக தொகையை விற்பனை பொருட்களின் விலையில்ஏற்றுவர். பேருந்து நிலையத்திற்குள் வாகனங்கள் வந்து செல்வதற்கான நுழைவுக் கட்டணமும் செங்குத்தாக உயர்த்தப்படும். கழிப்பிட வசதிகள் மூலமும் வருவாய்வருகிறது. இந்தக் கட்டணமும் கடுமையாக உயர்த்தப்படும். மக்களின் கோரிக்கை காரணமாக பல பேருந்துநிலையங்களில் இலவச கழிப்பிடங்கள் உள்ளன. அவை இனி இல்லாமல் போகும் ஆபத்து உருவாகும். இந்தக் கட்டண உயர்வுகள் எல்லாம் மக்களின் தலையில் சுமத்தப்படும். ஒரு வேளை இரயில்வே நிலையத்தில் இருப்பது போல இனி பேருந்து நிலையத்திலும் பிளாட்பாரம் கட்டணம் புகுத்தப்பட்டாலும் அதிர்ச்சி அடைய வேண்டியது இல்லை.மயிலாடுதுறை பேருந்து நிலையத்தை உருவாக்கரூ.38 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், தர்மபுரி ஆகியவை மாவட்ட தலைநகரங்கள். இங்கு இன்னும்கூடுதலாக செலவு மதிப்பீடு செய்யப்படும். மேலும் காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை ஆகியவை கோவில்கள் நிறைந்த நகரங்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று! இங்கு மக்கள் வந்து செல்வதும் அதிகமாக இருக்கும். இத்தகைய நகரங்களின் பேருந்துநிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பது என்பது இலாபக் கொள்ளைக்கு வழிவகுக்கும்.தற்போதைய பேருந்து நிலையங்களில் குறைகள் இல்லாமல் இல்லை. மாநகராட்சி நிர்வாகம் ஊழலைஒழித்தால் இன்னும் சிறப்பாக பேருந்து நிலையங்களை பராமரிக்க முடியும். உதாரணத்திற்கு அனைத்து நகரங்களிலும் கழிப்பிடத்திற்கு 1 ரூபாய் வாங்க வேண்டும் என்பதுதான் முடிவு. ஆனால் பல நகரங்களில் ரூ.5 க்கு குறையாமல் வசூல் செய்யப்படுகிறது. மீதி பணம் ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளின் பைகளுக்கும் செல்கிறது. ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக எடப்பாடி அரசாங்கம் மக்கள் சேவையை ஒழிக்க முயல்கிறது.நாட்டில் உள்ள 400 இரயில்வே நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மோடி அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. அந்த வழியில் எடப்பாடி அரசாங்கமும் பேருந்து நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கஎத்தனிக்கிறது. இது தனியார் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டுக் கொள்ளைக்குதான் வழி வகுக்கும். மக்களுக்கு எவ்விதத்திலும் பயன்படாது. தமிழக மக்கள் அதனை அனுமதிக்கவும் மாட்டார்கள்.

தகவல் ஆதாரங்கள்:- 1) உலக வங்கி அறிக்கைகள், 2) தமிழக அரசாங்க வலைதளம், 3) ஜூனியர் விகடன்/19.08.2018

அ.அன்வர் உசேன்

 

Leave a Reply

You must be logged in to post a comment.