புதுதில்லி:
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 4 மடங்கு அதிகரித்த போதும், இந்தியர்களின் சம்பளம் மட்டும் 2 மடங்கு அளவிற்கே அதிகரித்துள்ளது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பான ‘ஐஎல்ஓ’ தெரிவித்துள்ளது.சர்வதேச தொழிலாளர் அமைப்பான (ILO) ஆகஸ்ட் 20-ஆம் தேதி புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்தும், தொழிலாளர்களுக்கான ஊதியம் குறித்தும் பல்வேறு விவரங்களை அளித்துள்ளது.
அந்த அறிக்கையில்தான், ‘1993-94 நிதியாண்டுக்கும் 2011-12 நிதியாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நான்கு மடங்குக்கு மேலான வளர்ச்சியைக் கொண்டிருந்தும், இக்காலகட்டத்தில் தொழிலாளர்களின் ஊதியம் மட்டும் இரண்டு மடங்கு அளவிற்கே உயர்ந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2011-12ஆம் ஆண்டில் இந்தியாவில் சராசரி ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ. 247 என்ற அளவிலேயே இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஊதியக் குறைபாடு மற்றும் ஊதியச் சமமின்மை இந்திய வளர்ச்சிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது” என்று சுட்டிக்காட்டியுள்ள ஐஎல்ஓ, “இந்தியாவில் ஊதியம் வழங்குவதில், பாலின இடைவெளியும் இருக்கிறது; 1993-94ஆம் ஆண்டில் பாலின இடைவெளி 48 சதவிகிதமாக இருந்த நிலையில், 2011-12ஆம் ஆண்டில் அது 34 சதவிகிதமாகக் குறைந்துள்ளது” என்பதையும் பதிவு செய்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: