தீக்கதிர்

பசுமை மண்டலத்தை ரசாயன மண்டலமாக மாற்ற முயற்சி: மத்திய அரசு மீது கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு…!

திருவாரூர்;
பசுமை போர்த்திய காவிரி டெல்டா மாவட்டங்களை ரசாயன மண்டலமாக மாற்ற முயற்சிப்பதோடு கார்ப்பரேட் முதலாளிகளின் களமாக தமிழகத்தை உருவாக்குவதற்கான முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

செவ்வாய், புதன் (ஆகஸ்ட்-21,22) ஆகிய இரண்டு தினங்கள் திருவாரூர் மற்றும் நன்னிலம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர் திருவாரூரில் தோழர்.பி.ராமமூர்த்தி நினைவகத்தில் செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக பன்மடங்கு அதிகமாக பெய்ததால் கேரள மாநிலம் வரலாறு காணாத பேரிடரைச் சந்தித்துள்ளது. இதனால் அம்மாநில மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகிவிட்டனர்.

அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் விளைவாக 120 டிஎம்சி அளவிற்கு அம்மாநில பாதுகாப்புக்கருதி தமிழகத்திற்கு உபரிநீர் திறந்துவிடப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில் நீர் வரத்தும் குறைந்துள்ளது. ஈரோடு, நாமக்கல், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் பம்புசெட் மூலம் செய்யப்பட்ட சாகுபடி கூட இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அழிந்துள்ளது.

முற்றிலும் தோல்வி
மேட்டூர் அணையில் ஓரளவு தண்ணீர் இருந்த போது ஜூலை-13ஆம் தேதியே தண்ணீரை திறந்துவிடக்கோரி கோரிக்கை வைத்த நிலையில், அரசாங்கம் கனமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பிய போது ஜூலை -19 அன்று தண்ணீர் திறந்து விட்டது. இதன் காரணமாக ஒருபுறம் வெள்ளம் கரைபுரண்டோட, மறுபுறம் வறட்சி என அரசின் நீர் மேலாண்மைக் கொள்கை முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது. அதிகமான நீர்வரத்து இருக்கும்போது அதனை சேமித்து வைப்பதற்கான எந்தவிதமான தொலைநோக்குத்திட்டமும் இல்லாத காரணத்தினால் இன்று விவசாயத்திற்கு பயன்படாமல் காவிரி நீர் கடலில் கலந்து வருகிறது.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதே கொள்ளிடத்தில் 7 கதவணைகள் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்று அறிவித்தும் அத்திட்டம் செயல்பாட்டிற்கு வாராததால் கொள்ளிடம் பகுதியில் பல ஏக்கரில் சாகுபடி பணிகள் பாதித்துள்ளது. அரசு முறையாக நீர் மேலாண்மையை கையாண்டிருந்தால் குறுவை சாகுபடியைக்கூட விவசாயிகள் செய்திருப்பார்கள். ஆனால் சம்பா சாகுபடியையாவது குளறுபடி இல்லாமல் செய்துவிடலாம் என்று எதிர்பார்த்திருந்த விவசாயிகள் – குறிப்பாக கடைமடை பகுதி விவசாயிகள் தண்ணீர் வராத காரணத்தினால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆங்காங்கே தண்ணீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

கிராமசபைக் கூட்டங்கள்
இது ஒருபுறம் இருக்க அவ்வப்போது தண்ணீருக்காக போராடுவதும் ஓரளவிற்கு தேவையான தண்ணீர் கிடைத்தவுடன் பிறகு பிரச்சனையை மறந்துவிடுவதும் என விவசாயிகள் இருந்துவிட்டனர். இனி எதிர்காலத்தில் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டி வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று காந்தி பிறந்த நாளையொட்டி நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி அக்கூட்டத்தில் பங்கேற்க செய்வதற்கும், கிராமப்புற நீர்நிலைகளை பாதுகாத்து நீர்வளங்களை மேம்படுத்திட கோரிக்கைகளை முன்வைத்து அரசை செயல்பட வைப்பதற்கு அனைத்து முயற்சியையும் செய்வதென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

காவிரி ஆணையம்
தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் அணைகளின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. கர்நாடகத்தில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் நெருக்கடியில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடக்கும்போது கர்நாடக அரசு மழைக்காலத்தில் திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவை சுட்டிக்காட்டி வாதம் செய்ய நேரிடும். ஆனால் தமிழக அரசு அதனை ஏற்கக்கூடாது. உபரிநீர் பங்கீடு என்பது இரண்டு மாநிலத்திற்கும் பொதுவானது. காவிரி மேலாண்மை ஆணையமும் இதை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே மாதாமாதம் நமக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரை தமிழக அரசு பெற வேண்டும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கான 94 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. மேலும் 7 மாதங்களுக்கான 97 டிஎம்சி தண்ணீரை அளவிட்டு தமிழக அரசு பெற வேண்டும். அப்போது தான் சம்பா சாகுபடியை பாதுகாக்க முடியும். வரும் செப்டம்பர் மாதத்திற்கு 40 டிஎம்சி தண்ணீர் வர வேண்டியுள்ளது என்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

ரசாயன மண்டலமாக மாற்றாதே!
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. ஓஎல்சி என்ற ஒரு உத்தரவு மூலமாக நிலத்தடியில் இருந்து என்ன வளத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். தற்போது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி எண்ணெய் மட்டுமே எடுத்து வருகிறது. இந்த ஒரு உத்தரவின் மூலமாக அவர்கள் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் கேஸ் போன்ற எதையும் எடுக்க அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாட்டின் மூன்று இடங்கள் உட்பட இந்தியாவின் மேலும் 55 இடங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மத்திய அரசு திறந்த ஏல முறையை அறிவித்துள்ளது. இதில் முதற்கட்ட தேர்வில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி இருக்கும் வெளிநாட்டு கம்பெனியான வேதாந்தா குழுமம் இந்த 55 இடங்களுக்கும் தேர்வாகியுள்ளது.

இதன் நோக்கம் என்னவென்றால் பசுமை மண்டலமாக இருக்கக்கூடிய காவிரி டெல்டா மாவட்டங்களை ரசாயன மண்டலமாக மாற்றி கார்ப்பரேட் முதலாளிகள் ஆதாயம் அடைவதற்கும் காவிரி நதிநீரை கைகழுவி விட்டு விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்துவதற்கும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக எடப்பாடி அரசும் உடந்தையாக உள்ளது.

எனவே காவிரி டெல்டா மாவட்ட பசுமை மண்டலத்தை பாதுகாக்க அனைத்து பகுதி மக்களும் வேறுபாடற்ற முறையில் ஒன்றுசேர்ந்து போராட முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆர்.சாமியப்பன், எஸ்.தம்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.