பனாஜி:
பாஜக ஆளும் கோவா மாநிலத்தில், அரசு கணக்காளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், அதில், தேர்வு எழுதிய 8 ஆயிரம் பேரும் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவா அரசு அலுவலகங்களில் கணக்காளர் பதவிக்கு 80 காலியிடங்கள் ஏற்பட்டன; இதற்கு அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டது. 5 மணிநேர தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, கணக்கு தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருந்தன. மொத்தம் 100 மதிப்பெண்கள் என்ற நிலையில், குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றால், அவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. பட்டதாரிகள் மட்டும் இத்தேர்வை எழுத முடியும் என்று தகுதியும் வரையறுக்கப்பட்டு இருந்தது.ஆனால், தற்போது முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு எழுதிய ஒரு விண்ணப்பதாரர் கூட 50 சதவிகித மதிப்பெண்களைப் பெற முடியாமல் போயுள்ளனர். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தேர்வு எழுதிய 8 ஆயிரம் பேரும், தேர்ச்சியடையவில்லை என்றால் மாநிலத்தின் கல்வி முறை சீர்குலைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது; இது பட்டதாரிகளை உருவாக்கும் கோவா பல்கலைக்கழகத்திற்கும் வணிக கல்லூரிகளுக்கும் மிகப்பெரிய அவமானம்” என்று ஆம் ஆத்மி கட்சியின் கோவா பொதுச் செயலாளர் பிரதீப் பட்கோங்கர் விமர்சித்துள்ளார்.
“முதலில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு, ஏன் இவ்வளவு காலம் ஆனது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.