புதுதில்லி:
வரலாறு காணாத வெள்ளம் – பேரிடரில் சிக்கியுள்ள கேரளத்திற்கு அம்மாநில அரசு கோரியுள்ள உடனடி நிவாரணம் ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக அளிக்க வேண்டும் என
பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.கேரளம் முழுமையாக மீள்வதற்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் முழுமையாக செய்திட வேண்டும் என்றும அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெருவெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு மத்திய அரசின் உதவியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், மேற்கொள்ளப்பட வேண்டிய இதர நடவடிக்கைகளையும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி விரிவான கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:

ஆகஸ்ட் 19-20 ஆகிய தேதிகளில் கேரள மாநிலத்திற்கு நான் சென்றது குறித்த விவரங்களை தங்களுக்குத் தெரிவித்திடவும், சமீபத்திய பெரு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத சேதங்களால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக் கணக்கான மக்களுக்கு நிவாரணம் அளித்திடவும், அவர்களது மறுவாழ்வுக்காகவும் கீழ்க்காணும் உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்திடவும் தங்களது நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென நினைத்தேன்.

கேரள மாநிலத்திற்கு நீங்கள் நேரில் சென்று, அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ததில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீட்பதில் மாநில அரசும், அங்குள்ள அதிகாரிகளும் மிகப் பெரிய அளவில் செயல்பட்டுள்ளார்கள் என நீங்களே பாராட்டினீர்கள். சமீப காலங்களில் முன்னெப்போதும் நடந்திராத பரிமாணத்திலான மீட்புப் பணி இதுவாகும்.

ரூ.500 கோடி மிகக் குறைவானது                                                                                                                                        மத்திய அரசின் உதவியாக ரூ.500 கோடியை நீங்கள் ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். ஆனால், அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத சேதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இத்தொகை மிகக் குறைவானதாகும். இத்தொகையை உடனடியாக 2000 கோடி ரூபாய்களாக அதிகரித்திட உங்களை கேட்டுக் கொள்கிறேன். மேலும், தற்போதுள்ள அவசரநிலைக்கு ஏற்றவாறு சாதகமான பதிலை அளிக்குமாறு வலியுறுத்துகிறேன்.

மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமான ஆலப்புழா உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு நான் நேரில் சென்று பார்த்தேன். முகாம்களின் நிலைமைகள் குறித்து அங்குள்ள மக்கள் திருப்தியடைந்துள்ளனர். எனினும், தங்களது வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, தங்களது உடைமைகள் எல்லாம் அழிந்துவிட்டன என்பது குறித்து சொல்லொணாத் துயரத்தில் உள்ளனர். எதிர்காலத்தில் எவ்வாறு எதிர்கொள்வது என்பதே அவர்களது அதிமுக்கியமான கவலையாகும். இம்மக்களின் மறுவாழ்விற்கு பெரும் நிதி தேவைப்படுகிறது. எனவே, கூடுதல் நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்கிட வேண்டும்.

லட்சக்கணக்கான வீடுகள் தேவை
லட்சக்கணக்கான மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும். மத்திய அரசின் திட்டமான பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் இதற்கென கணிசமான தொகை ஒதுக்கப்பட வேண்டும். புதிய வீடுகளை கட்டுவதற்கு ஐநா அமைப்பின் உதவியைக் கோரிடுமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

ராணுவம், மத்திய அரசுத் துறைகள் உதவிட வேண்டும் 
வரலாறு காணாத வெள்ளத்தால் கேரளாவில் பல நூற்றுக்கணக்கான பாலங்களும், சாலைகளும் சேதமடைந்துள்ளன. அம்மாநிலத்தில் ஓடும் 41 ஆறுகளில் 40-ல் வெள்ளம் பெருக்
கெடுத்துள்ள நிலையில், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள அவசியமான தகவல் பரிமாற்றம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் பரிமாற்ற வலைப் பின்னல்களை மறுகட்டமைப்பு செய்திட, தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் இதர
மத்திய அரசின் துறைகள் தங்களது ஆட்களை யும், வளங்களையும் பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, இக்கட்டான சூழல்களில் சாலைகளையும், பாலங்களையும் கட்டுவதில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ள இந்திய ராணுவத்தின்
தொழில்நுட்ப பிரிவுகள் மற்றும் எல்லையோர சாலைகள் அமைப்பு போன்றவை இப்பணியை மேற்கொள்ளும் அம்மாநில அரசிற்கு  உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட வேண்டும்.வெள்ளநீர் வடிந்து வருகிற நிலையில், மிகப் பெரிய அளவில் சுகாதாரப் பிரச்சனை கள் எழுந்திடும். இந்நிலைமையை எதிர்கொள்ள  மாநில அரசு மேற்கொள்ளும் முயற்சிகளில் உதவிட, அம்மாநில அரசு முடிவு செய்திடும் பகுதிகளில் ராணுவத்தின் மருத்துவ குழுக்கள் பணியிலமர்த்தப்பட கேட்டுக் கொள்ளப்பட வேண்டும். மேலும், நிவாரணம் அளித்திடவும்,தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுத்திடவும், எய்ம்ஸ் போன்ற அமைப்புகள் மருத்துவக் குழுக்களை அமைத்து கேரளத்திற்கு அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட வேண்டும். இதுதொடர்பான உதவிகளைக் கோரி உலக சுகாதார மையத்தின் உதவிகளையும் மத்திய அரசு பெற்றிடலாம்.

ஜிஎஸ்டியும் பேரிடர் நிதியும்
தற்போது கேரள மாநிலம் எதிர்கொண்டுள்ள சவால்களை சந்திப்பதில் உள்ளார்ந்த உணர்வுகளையும்,ஒற்றுமையையும் அம்மாநில மக்கள் வெளிப்படுத்தி யுள்ளனர். பணமாகவும், பொருட்களாகவும் உதவிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து கேரளத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் வசித்து வரும் மலையாளிகளின் அமைப்புகளால் மருத்துவ கருவிகளும் அனுப்பப்பட்டு வருகின்றன. உடனடி நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக இவ்வாறு அனுப்பப்படும் பொருட்கள் மீதான தீர்வையை தள்ளுபடி செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தேவைப்படும் நிதியை மாநில அரசுகளால் எவ்வாறு உருவாக்கிட இயலும் என்பது குறித்து சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மீதான விவாதத்தின் போது நான் கவலை களை எழுப்பியது தங்களது நினைவிலிருக்கும். இத்தகைய
சூழல்கள் ஏற்படும்போது அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என அப்போது மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது.

அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை என்றாலும், நாடாளுமன்ற அவையில் அளித்த உத்தரவாதத்தை அரசு செயல்படுத்தி, சம்பந்தப்பட்ட ஜிஎஸ்டி விதிமுறைகளை தளர்த்தி தேவைப்படும் நடவடிக்கைகளை கேரள மாநில அரசு மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதற்கான தருணம் இதுவாகும்.

முதல்கட்ட மீட்பு நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவுற்றிருப்பதாக கேரள மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.மறுவாழ்வு, போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்ற தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்துதல் மற்றும் சுகாதார பிரச்சனைகளை எதிர்கொள்தல் ஆகியன தொடர்பான அடுத்தகட்ட பிரச்சனைகளை தற்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது.இப்பிரச்சனைகளில் தேவைப்படும் அக்கறையோடு நான் முன்வைத்துள்ள ஆலோசனைகளைத் தாங்கள் பரிசீலித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய நடவடிக்கைகளை தேவைப்படும் வேகத்தில் மனிதாபிமான உணர்வுகளோடு செயல்படுத்திடுமாறு வலியுறுத்துகிறேன்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.