தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக கூட்டம் கருத்துரிமையை கருவறுக்கும் வேலையை மீண்டும் மும்முரமாக துவங்கியுள்ளது. கருத்தை கருத்தால் எதிர்கொள்வது என்பதற்கு மாற்றாக உளவியல் ரீதியாக சித்ரவதை செய்வது, பொய்வழக்குகளை போட்டு அலைக்கழிப்பது என்ற தங்களது வழக்கமான பாணியை தொடர்கின்றனர்.கவிஞர் மனுஷ்யபுத்திரன் கவிதை ஒன்றை எழுதி சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இது பெண்களின் பெரும் துயரம் பற்றியது. ஆனால் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, இந்தக் கவிதையை இந்து பெண் தெய்வங்களை இழிவுபடுத்துவதாக திரித்து தன்னுடைய முகநூலில் எழுதியுள்ளதோடு மனுஷ்யபுத்திரன் மீது அனைத்து காவல்நிலையங்களிலும் புகார் அளிக்குமாறு தூண்டிவிட்டுள்ளார்.

அவரை கைது செய்ய வேண்டும் என்றும் எச்.ராஜா வற்புறுத்தியுள்ளார்.மனுஷ்யபுத்திரனின் அலைபேசி எண் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு, அவருக்கு ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜக போன்றவர்களால் கொலை மிரட்டல் விடப்படுகிறது. இதுகுறித்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தாம் எழுதிய கவிதை இந்துக் கடவுள்களை புண்படுத்துவது அல்ல என்று மனுஷ்யபுத்திரன் விளக்கமளித்துள்ளார். எனினும் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இதன் மூலம் மக்களைப் பாதிக்கிற வாழ்வாதார பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புகிற நோக்கம் கொண்ட எச். ராஜா தொடர்ந்து விஷம் கக்கி வருகிறார். கவிஞர் வைரமுத்து ஒரு ஆய்வுக் கருத்தை மேற்கோள் காட்டியதற்காக அவரை அவதூறு செய்து, கொலைமிரட்டல் விடுத்ததோடு, பெரும் கலவரத்தை தூண்டிவிடவும் திட்டமிட்டது இதே எச்.ராஜா தான். வைரமுத்து விளக்கம் அளித்த பிறகும் எச்.ராஜா தொடர்ந்து அவதூறு செய்து கொண்டே இருந்தார். பெரியார் குறித்து இழிவான கருத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட எச். ராஜா, எதிர்ப்பு அதிகமானவுடன் தமக்கு தெரியாமல் தமது முகநூலில் அது எழுதப்பட்டுவிட்டதாக பல்டி அடித்தார். பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கருத்தை பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர்தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றம் வரை சென்றபோதும் அவரை கைது செய்ய தடைவிதிக்கப்படவில்லை. எனினும் கடைசிவரை எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவே இல்லை. அவருடைய உறவினர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருப்பதாலேயே சேகர் கைது செய்யப்படவில்லை என்ற விமர்சனம் பகிரங்கமாக எழுந்தது. சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி மீதுஇந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். காவல்துறை மூலமாக மிரட்டுவது, சமூக வலைத்தளங்கள் மூலமாகஅவதூறு செய்வது என்பதெல்லாம் அப்பட்ட மான கருத்துரிமை மறுப்பாகும். எச்.ராஜா போன்றவர்களிடமிருந்து கருத்துரிமையையும் கவிதை உரிமையையும் படைப்புரிமையையும் பாது காப்பது தமிழகத்தின் கடமையாக மாறியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.