திருச்சி:
கடைமடைக்கு காவிரி தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பாசன பகுதிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர்களை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
கர்நாடகாவில் பெய்த கன மழையால் அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் மேட்டூர் அணை இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நிரம்பியது. மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரால் திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் விவசாயிகள் வாய்க்கால் பாசனம் மூலம் நெல், வாழை, கரும்பு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த வாய்க்கால்களின் மூலம் பல ஏரி, குளங்களிலும் நீர் நிரப்பப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான், பழைய கட்டளை, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களின் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாய பணிகளை தொடங்க முடியவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை- பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் புதனன்று திருச்சி அருகே உள்ள தாயனூர், புங்கனூர், நவலூர் குட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் வாய்க்கால் பாசன பகுதிகளை ஆய்வு செய்வதற்காக வந்தனர். மாவட்ட ஆட்சியர் ராசாமணி, பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட பொறியாளர் கணேசன் உள்பட அதிகாரிகளும் உடன் வந்தனர்.
தாயனூர் சந்தை அருகே உள்ள பழைய கட்டளை வாய்க்காலை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

இந்த வாய்க்காலில் சிறிதளவே தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த விவசாயிகள் அமைச்சர்களை முற்றுகையிட்டனர். மாயனூரில் இருந்து பழைய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் கடைமடை பகுதியான இங்கு தண்ணீர் முறையாக வந்து சேரவில்லை. அதிகாரிகள் வருகிறார்கள் என்பதால் இப்போது தண்ணீர் வந்துள்ளது. இந்த தண்ணீரை வைத்துக்கொண்டு நாங்கள் எப்படி சாகுபடி பணியை தொடங்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மாவட்ட ஆட்சியர் கோபத்துடன் பதிலளித்தார். இதனால் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.