===பி.சாய்நாத்===
கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 18. 19 தேதிகளில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்க 25 ஆவது வெள்ளிவிழா மாநாட்டை துவக்கி வைத்து இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளர் பி.சாய்நாத் ஆற்றிய உரையின் பகுதிகள்:

1977 முதல் 81ஆம் ஆண்டுவரை தில்லியில் ஜே.என்.யு பல்கலைக் கழகத்தில் நான் பயின்றேன். அப்போது இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்றிய காலம் இன்றும் என் நினைவில் உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் “students struggle” பத்திரிகை துவக்கியதில் நானும் ஒருவனாக இருந்தவன் என்பதை இந்நேரத்தில் பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

பொருளாதார அசமத்துவத்தின் உச்சியில் இந்திய சமூகம்                                                                                        இந்திய சமூகம் எந்த அளவிற்கு அசமத்துவமாக உள்ளது என்பது குறித்து உங்களிடம் பேச விரும்புகிறேன்.

இன்றைக்கு இந்திய சமூகம் மிகவும் சமமற்ற அசமத்துவமான சமூகமாக நிலவுகிறது. உலகிலேயே மிக அதிகமான அசமத்துவமான தேசமாக இந்தியா உள்ளது.  பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில் கூட இப்படி இருந்ததில்லை என்றால் அது மிகையல்ல. அசமத்துவம் அந்த அளவிற்கு பூதாகரமாக வளர்ந்துள்ளது. நாடு விடுதலை பெற்ற 1947 மற்றும் 1980க்கு இடைப்பட்ட காலத்தில் அசமத்துவம் சிறிதளவு குறைந்திருந்தது. ஆனால் 1980லிருந்து குறிப்பாக 1990களுக்கு பிறகு வரலாறு காணாத அளவில் அசமத்துவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த அசமத்துவம் குறித்து ஒரு சில உதாரணங்களை சொன்னால் உங்களுக்கு விளங்கும்.

1991 இல் இந்தியாவில் ஒரு டாலர் பில்லியனர் கூட இருந்ததில்லை. (ஒரு டாலர் மில்லியனர் என்றால் 7000 கோடி ரூபாயும் அதற்கு மேலும் சொத்து உள்ளவர்கள்.)  2000ம் ஆண்டு 8 பேர் டாலர் பில்லியனராக இருந்தனர். 2012 ஆம் ஆண்டு இது 53 ஆக உயர்ந்தது. மார்ச் 2018 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. இந்த கணக்கு நாம் சொல்வதல்ல! முதலாளித்துவத்தின் முக்கிய ஏடான ‘போர்பர்ஸ்’ (Forbes) சொல்கிறது. இந்த 121 தனி நபர்களின் சொத்து கணக்கு என்பது 441 பில்லியன் டாலர்!. அதாவது 31லட்சம் கோடி ரூபாய்! இது இந்திய நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 22 சதவீதமாகும்.

இதில் முகேஷ் அம்பானியின் சொத்து மட்டும் 41 பில்லியன் டாலர்(2,81,000 கோடி ரூபாய்)! இதே முகேஷ் அம்பானியின் சொத்து 2017 ஆம் ஆண்டில் 23 பில்லியன் டாலராக இருந்தது. 2018 ஆம் ஆண்டு 41 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானி என்கிற ஒரே ஒரு நபர் மட்டும் ஒரு ஆண்டில் சுமார் 17 பில்லியன் டாலர் (1,19,000 கோடி ரூபாய்) சொத்துக்களை அதிகமாக சேர்த்துள்ளார். அதாவது ஒரு மணிநேரத்திற்கு ரூ.14 கோடி வீதம் சொத்து அதிகமாகியுள்ளது. உலகத்திலேயே எந்த பணக்காரரும் இப்படி சொத்து சேர்த்தது கிடையாது. முகேஷ் அம்பானி ஒரு ஆண்டில் சேர்த்த 1,19,000 கோடி ரூபாய் தொகையின் மூலம் என்ன செய்ய முடியும்? மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 8 கோடி பேருக்கு 365 நாட்களும் வேலை வாய்ப்பு அளிக்க முடியும். அதுவும் சனி, ஞாயிறு, தீபாவளி, பொங்கல் விடுமுறை எடுக்காமல் 8 கோடி பேர் ஓராண்டு உழைத்து என்ன வருவாய் ஈட்டுவார்களோ அதனை ஒரே ஆண்டில் ஒரே ஒரு நபரான முகேஷ் அம்பானி ஈட்டியுள்ளார்.

இது அசமத்துவத்தின் ஒரு அம்சம் எனில் அதன் இன்னொரு அம்சத்தையும் பாருங்கள். கிராமப்புறத்தில் ஐந்து பேர் கொண்ட விவசாய குடும்பத்தின் வருவாய் என்பது வெறும் 6426 ரூபாய் மட்டும்தான். இது அரசாங்கத்தின் NSSO எனப்படும் தேசிய மாதிரி ஆய்வு குழுவின் மதிப்பீடு ஆகும். 2012ஆம் ஆண்டின் ஆய்வின்படி கிராமப்புறங்களில் 75% குடும்பங்களுக்கு அதாவது 18 கோடி குடும்பங்களுக்கு மாதம் ஐயாயிரம் ரூபாய்க்கும் குறைவான சம்பளம்தான் கிடைக்கிறது. இதனை மாதம் ரூ.10000 என வைத்துக் கொண்டால் 90 சதவீத கிராமப்புற குடும்பங்கள் பத்தாயிரத்திற்கும் குறைவான ஊதியமே ஈட்டுகின்றன. இதே நிலைதான் முறைசாரா தொழிலாளர்களுக்கும் உள்ளது. 52 சதவீத குடும்பங்கள் நிலையான மாத வருமானம் இல்லாதவர்களாக உள்ளனர். அன்றைக்கு வேலை கிடைத்தால் கூலி! வேலை நிரந்தரமாக கிடைக்கும் எனும் உத்தரவாதம் இல்லை. எனவே 52 சதவீத குடும்பங்களுக்கு நிலையான மாத ஊதியம் என்பது கிடையாது.

சென்ற ஆண்டை ஒப்பிடும் பொழுது 2017ஆம் ஆண்டில் கிராமப்புற கீழ் மட்ட 10 சதவீத குடும்பங்களின் வருமானம் பூஜ்யத்திற்கும் கீழ் மைனஸ் 3 முதல் 5 சதவீதம் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதேபோல 30 சதவித கிராமப்புற குடும்பங்களின் வருவாய் வளர்ச்சி 0%ஆக உள்ளது. கிராமப்புற மக்கள் எந்த அளவிற்கு வறுமையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

இதனை 121 டாலர் பில்லியனர்களின் சொத்துக்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இது எதைக்காட்டுகிறது? ஏழை மக்களிடம் இருந்து அவர்களுடைய வருமானமும் சொத்தும் பணக்காரர்களிடம் சென்று சேர்கிறது. 20 ஆண்டுகாலமாக இதுதான் நமது நாட்டில் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால்தான் ஏழை மக்கள் மேலும் ஏழையாகவும், பணக்காரர்கள் மேலும் சூப்பர் பணக்காரர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.  இதன் விளைவாகவே விவசாயம், குடிநீர், கல்வி என அனைத்து துறைகளிலும் நெருக்கடி உருவாகியுள்ளது.

கல்வி நெருக்கடி இந்த சொத்து மடைமாற்றம் எப்படி நடக்கிறது?                                                                         பொது சொத்துக்கள் தனியார்மயப்படுத்தப்படுகின்றன. கல்வி நிலையங்கள் உட்பட ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனியார் மயப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் எந்த அளவிற்கு தனியார் கல்லூரிகள் புற்றீசல் போல் வளர்ந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்தவன். மகாராஷ்ட்ராதான் தனியார் கல்வி நிறுவனங்களின் தலை நகரமாக உள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஒவ்வொரு  பணக்காரரும் கல்வி நிறுவனங்களை துவக்கி வருகிறார்கள். எந்த ஒரு முதலாளியும் கல்வி நிறுவனங்களில் இருந்து ஒதுங்கி நிற்பதில்லை. அரசாங்கம் கல்வியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறது. அதே சமயத்தில் தனியார் கல்வித்துறையில் வேகமாக நுழைந்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியிலும் இதுதான் நடந்தது. தற்போது பாஜக ஆட்சியிலும் இதுதான் நடந்து வருகிறது.

மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ஜிண்டால் பல்கலைக்கழகம் துவங்கியுள்ளது. இதேபோல ரிலையன்ஸ் பல்கலைக்கழகம் தொடங்க உள்ளது. பென்னட் கோல்மென் குழுமம்தான் டைம்ஸ் ஆப் இந்திய பத்திரிகை நடத்துகிறது. இவர்களும் பல்கலைக் கழகங்களை தொடங்குகின்றனர். இப்படி தனியார் நிறுவனங்கள் பல்கலைக் கழகங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். இதன் காரணமாகவே ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்கும் ஜேஎன்யு பல்கலைக் கழகம் உள்ளிட்ட அரசின் பொது பல்கலைக் கழகங்கள் சிதைக்கப்படுகின்றன; சீரழிக்கப்படுகின்றன.

ஜேஎன்யு உட்பட பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்விக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத கோமாளிகள் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சொல்லப்படுகிற ஒரே உத்தரவு இப்பல்கலைக் கழகங்களின் சுயேச்சை தன்மையை ஒழித்து அவற்றை காவிமயமாக்கப்பட வேண்டும் என்பதே. இதனால் கோடிக்கணக்கான ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் உயர்கல்விக்கு போக முடியாத சூழலை திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்கள்.

தனியார் பல்கலைக் கழகங்கள் எப்படி இருக்கின்றன? டைம்ஸ் ஆஃப் இண்டியா நிறுவனர் பென்னட் என்பவர் பெயரால் உள்ள பல்கலைக் கழகத்தின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மேடையில் இருந்தவர்களுக்கு பென்னட்டை பற்றி ஏதுவும் தெரியாது. பென்னட் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராக இருந்தவர். அந்த மேடையில் இருந்தவர்கள் பேசுகையில்  பென்னட் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதினார் என பேசுகிறார்கள். இதைவிட பொய், அயோக்கியத்தனம் என்பது ஏதும் இருக்க முடியாது.

பென்னட் தனது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் பிரிட்டிஷ் அரசை விமர்சித்து பேசினார். எதற்காக என்றால் பாலகங்காதர திலகருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை குறைவான தண்டனை எனவும் அவர் மீது தேச துரோக வழக்கின் கீழ் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் வாதிட்டார். இத்தகைய நபரின் நினைவாகத்தான் இந்தியாவில் தனியார் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்படுகிறது. திலகருக்கு எதிராகவும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் எழுதியவரின் நினைவாகத்தான் பல்கலைக் கழகங்கள் ஆரம்பிக்கப்படுகிறது என்றால் உயர்கல்வியின் நிலை எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

விவசாய நெருக்கடி                                                                                                                                                                   விவசாய நெருக்கடி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். விவசாய நெருக்கடி என்பதன் பொருள் என்ன? கார்ப்பரேட்டுகளும், முதலாளிகளும் விவசாயத்திற்குள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே இதன் பொருள். இதனால் கிராமப்புற மக்களின் வருவாய், சொத்து அனைத்தையும் கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்துவருகின்றனர். தற்போது நிலத்தின் மீது மட்டும்தான் விவசாயிக்கு ஆளுமையும் உரிமையும் உள்ளது. விவசாயத்திற்கு தேவையான விதை, உரம், நீர் என எந்த பொருளின் மீதும் விவசாயியின் உரிமையோ அல்லது ஆளுமையோ இல்லை. நான்கைந்து பன்னாட்டு நிறுவனங்கள் விதைகள் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதேபோல உரத்தின் மீதும் விவசாயிகளுக்கு உரிமையில்லை. சில கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் உரத்தை உற்பத்தி செய்கின்றன. விதை மற்றும் உரத்திற்காக அரசு வழங்கும் மானியங்கள்கூட விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. மாறாக அதனை உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே போய்ச் சேருகிறது. இதேபோல தண்ணீர் உரிமைகூட தற்போது விவசாயிகளுக்கு இல்லை என்பது மட்டுமல்ல மக்களுக்கே இல்லை என்கிற சூழல் உருவாகியுள்ளது.

தண்ணீர் உரிமை யாருக்கு?                                                                                                                                                    தண்ணீர் வணிகப்பொருளாக மாற்றப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்படுகிறது. மராட்டிய மாநிலத்தின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்! கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவைவிட மும்பை போன்ற நகரங்களுக்கு 400 மடங்கு அதிகமான தண்ணீர் வழங்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம்? தண்ணீர் என்பது இயற்கை வளம். இது கடந்த காலங்களில் மக்களுக்கு, சமூகத்திற்கு சொந்தமாக இருந்தது. இந்த உரிமை தற்போது கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக தண்ணீரின் மீது இருந்த உரிமையை விவசாயி இழந்து நிற்கின்றான். விவசாய நெருக்கடியின் கொடூரமான வடிவம் இது.

தண்ணீர் என்பது அனைவரது வாழ்க்கையின் மிக முக்கியமான பிரிக்க முடியாத ஒரு பகுதி. ஆனால் பல வடிவங்களில் தண்ணீர் ஒருபகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு திருப்பிவிடப்படுகிறது. விவசாயத்தில் இருந்து தண்ணீர் தொழில்துறைக்கு மாற்றப்படுகிறது. கிராமப்புறத்தில் இருந்து நகர்புறத்திற்கு திருப்பிவிடப்படுகிறது. உணவுப்பயிர்களில் இருந்து பணப்பயிர்களுக்கு தண்ணீர் திருப்பிவிடப்படுகிறது. உணவுப்பயிரை விட பணப்பயிர்களுக்கு தண்ணீரின் அளவு அதிகமாகத் தேவைப்படும். மும்பை, சென்னை போன்ற நகரங்களில் உள்ள பல அடுக்கு மாடி கட்டிடங்களில் நீச்சல் குளம் அமைக்கப்படுகிறது. அதற்கு தினம்தோறும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் கிராமப்புறத்தில் உள்ள மக்கள் தண்ணீருக்காக தவிக்க  வேண்டியதாக உள்ளது. இப்படி மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய தேவையான தண்ணீர் மடைமாற்றம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தண்ணீருக்கான போராட்டம் என்பது மிகப்பெரிய அளவில் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் பெப்சி, கொக்ககோலா நிறுவனம் குளிர்பான தயாரிப்பிற்காக தண்ணீரை உறிஞ்சினார்கள். அதை அங்குள்ள மக்கள் எதிர்த்து போராடினார்கள். அதேபோல கேரளா மாநிலத்தில் பிளாச்சிமடாவில் இதே குளிர்பான நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

  • தண்ணீர் உரிமை என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட இலவசமாக தரப்படுகிறது. மராட்டிய மாநிலத்தில் மராத்வாடா என்கிற மண்டலம் உள்ளது. மராட்டிய மாநிலத்திலேயே வறட்சியான மண்டலம் என்றால் அது மராத்வாடாதான். நீங்கள் எப்போது அங்கு போனாலும் தண்ணீருக்காக பெண்கள் தண்ணீர் லாரிகள் முன்பு நீண்ட வரிசையில் காத்துக்கிடப்பார்கள். எதற்கு? ஒரு லிட்டர் தண்ணீருக்கு அவர்கள் ஒரு ரூபாய் தர வேண்டும். ஆனால் அதே மராத்வாடா பகுதியில் 20 பன்னாட்டு மது உற்பத்தி தொழிற்சாலைகளில் சாராயம், பீர் உற்பத்தி செய்ய ஒரு லிட்டர் தண்ணீர் 4 பைசாவிற்கு தரப்படுகிறது. சாதாரண மக்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு ரூபாய்! பன்னாட்டு நிறுவனங்களின் மது உற்பத்திக்கு நான்கு பைசாவிற்கு தண்ணீர் தரப்படுகிறது. தண்ணீர் எந்த அளவிற்கு கார்ப்பரேட் மயமாக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள். 

உலகம் முழுவதும் தண்ணீர் விற்பனை உரிமை நான்கைந்து பன்னாட்டு நிறுவனங்களிடம்தான் உள்ளது. உலகத்திலேயே முழுமையாக தனியார்மயமாக்கப்படாத இயற்கை வளம் ஒன்று உண்டு என்றால் அது தண்ணீர்தான். இந்த நான்கைந்து நிறுவனங்களிடம் கூட பத்து சதவீத தண்ணீர் உரிமைதான் உள்ளது. ஆனால் இந்த பத்து சதவீத உரிமைகூட கோடி கோடி டாலர்கள் லாபமாக கொள்ளையடிப்பதற்கு வழிவகுத்துள்ளது. சமூகத்திடம் உள்ள  மீதம் 90 சதவீத தண்ணீர் உரிமையை அபகரிப்பதற்கு இந்த பன்னாட்டு நிறுவனங்கள் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்.

இதன் ஒருபகுதியாகத்தான் கோவையில் 26 ஆண்டுகளுக்கான குடிநீர் விநியோக உரிமையை பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான சூயஸ் நிறுவனத்திடம் தரப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற உறுப்பினர்களின் பதவிக்காலம் கூட ஐந்தாண்டுகள்தான்.  ஆனால் மாநகராட்சி ஆணைய நிர்வாகம் 26 ஆண்டு காலத்திற்கு குடிநீர் விநியோகத்தை சூயஸ் பன்னாட்டு நிறுவனம் லாபம் சம்பாதிக்க தருகிறது.  தென்னாப்பிரிக்க ஜோகன்னஸ்பார்க் நகரத்தில் குடிநீர் விநியோகம் தனியாருக்கு தரப்பட்டது. இதன் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. குடிநீருக்கான விலை மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதால் மக்கள் போராட்டம் நடத்தினர். கலகம் செய்தனர். அங்கு விரட்டியடிக்கப்பட்ட நிறுவனம்தான் கோவை தண்ணீர் உரிமையை பெற்றுள்ளது.

தண்ணீரை பொருத்தவரை தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறோம். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற ஒரு லிட்டர் பாலின் விலையைவிட ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை அதிகமாக உள்ளது. கிராமப்புறத்தில் விவசாயிக்கு கூட்டுறவு நிலையத்தில் தான் உற்பத்தி செய்த ஒரு லிட்டர் பாலுக்கு பெறுவது 17 ரூபாய் மட்டும்தான். ஆனால் அதே பால், நகரத்தில் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் நகரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கரங்கள் இணையட்டும்!                                                                                                                                                     கடந்த பத்தாண்டுகளில் விவசாயிகளின் இடுபொருட்களின் விலை 500 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. 1995 முதல் 2015 ஆண்டு காலத்தில் மூன்று லட்சத்து பத்தாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இது நம்முடைய கணக்கல்ல. அரசின் கணக்கு! விவசாயிகளின் தற்கொலை குறித்த கணக்குகளை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்றப்பிரிவு பதிவு ஆணையம்தான் வெளியிடுகிறது. ஆனால் இந்த தற்கொலை சம்பவங்கள் மிக அதிகமாக நடைபெறுவதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த புள்ளி விபரங்களை அரசு வெளியிடவே இல்லை. அப்படியென்றால் எந்த அளவிற்கு விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இத்தகைய நெருக்கடியில் உள்ள விவசாயிகள் ஆவேசத்துடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களின் நில உரிமைக்காக மட்டும் போராடவில்லை. கார்ப்பரேட்டுகளிடமிருந்து விடுதலை பெறுவதற்காக தங்களுடைய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் இந்த போராட்டத்தை நடத்திக்கொண்டு வருகிற நிலையில்  மாணவர்கள் என்கிற முறையில் நீங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த இரண்டு கேள்விகளை உங்கள் முன்பு வைக்கிறேன்.

விவசாயம் அழிக்கப்படுகிறது, கல்வி சீரழிக்கப்படுகிறது. மருத்துவ வசதிகள் ஒழிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை இல்லை. இதனால் எல்லோரும் போராட வேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் எனத் தனித்தனியாக போராடினால் நாம் தோற்றுவிடுவோம். நம்மால் வெல்ல முடியாது. இத்தகைய போராட்டங்கள் அரசியல் களத்தில் ஒன்றுபட வேண்டிய அவசியம் வந்துள்ளது. அத்தகைய அரசியல் களத்திற்கு நீங்கள் வருகிறீர்களா என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி.

தொகுப்பு: அ.ர.பாபு, அன்வர் உசேன்

Leave A Reply

%d bloggers like this: