புதுதில்லி;
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று ‘ரிலையன்ஸ்’ முதலாளியான அனில் அம்பானி கூறியுள்ளார்.
இப்பிரச்சனையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் அலறியுள்ளார்.ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடைப்பெற்றுள்ளது என்றும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமான வகையில், மோடி அரசு முடிவுகளை எடுத்திருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
“இந்திய அரசானது, கடந்த 2016-ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டிலிருந்து ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. முதலில் ஒரு விமானத்தின் விலை ரூ. 540 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், திடீரென, ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயம் அடைவதற்கு ஏற்ற வகையில் மோடி அரசு ஒப்பந்தத்தை மாற்றி அமைத்தது; இதனால் விமானத்தின் விலை ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உயர்ந்தது. எனவே, ரபேல் போர்விமான ஒப்பந்தம் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்” என்பது ராகுல் காந்தியின் கோரிக்கையாகும்.

இது தற்போது பாஜக-வுக்கு எதிராக அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ரிலையன்ஸ் முதலாளி அனில் அம்பானி விளக்கக் கடிதம் எழுதியுள்ளார்.

“ரபேல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் அற்றதாகும். தீங்கு இழைக்கும் நோக்கத்தில் கார்ப்பரேட் நிறுவன போட்டியாளர்கள் சிலர், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு, தவறான தகவல்களை அளித்து, தவறாக இயக்கி, தவறான பாதையில் அழைத்து செல்கிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், இந்திய பாதுகாப்புத்துறைக்கும் இடையே ரபேல் விமான தயாரிப்பு தொடர்பாக எவ்வித ஒப்பந்தமும் ஏற்படுத்தப்படவில்லை.ரபேல் விமானத்தில் இருக்கும் ஒரே ஒரு பாகம் கூட டஸ்சால்ட் – ரிலையன்ஸ் கூட்டு தயாரிப்பு கிடையாது. ஒப்பந்தத்தில் உள்ள 36 ரபேல் போர் விமானங்களின் 100 சதவிகித பாகங்கள் அனைத்தும் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது” என்று அனில் அம்பானி விளக்கியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.