திருப்பூர்,
மாற்றுத் திறனாளிகளை கடவுளின் குழந்தைகள் என சொல்லும் பிரதமர் மோடி, அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க தேவையான வசதிகள் செய்து தருவது பற்றி மௌனம் காப்பது ஏன் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல உரிமை சங்க மாநிலத் தலைவர் பா.ஜான்ஸிராணி கேள்வி எழுப்பினார்.

திருப்பூரில் செப்டம்பர் 2-4 தேதிகளில் மாற்றுத் திறனாளிகள் சங்க 3ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டை முன்னிட்டு திங்களன்று திருப்பூர் எம்.சி.மஹாலில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகளின் தற்கால நிலை குறித்து மாநிலத் தலைவர் பா.ஜான்ஸிராணி கருத்துரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் அவமதிப்பு, புறக்கணிப்பு என மோசமான சூழ்நிலையைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில் ஒரு ஆண்டில் 1000 மாற்றுத் திறனாளிகள் தற்கொலை செய்து கொண்டனர். அமெரிக்கா, ஜப்பான் என வளர்ந்த நாடுகளிலும் மாற்றுத் திறனாளிகள் நிலை மோசமாகவே உள்ளது. இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளை கடவுளின் குழந்தைகள் என பிரதமர் மோடி வர்ணிக்கிறார். ஆனால் அவர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலையே உள்ளது. அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கவும், அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரவும் கேட்டால் பதில் இல்லை. மோடி மௌனம் காப்பது ஏன்?

இது பற்றி ஒரு சில கோயில்கள் பதில் அனுப்பின. ஆனால் இந்து அறநிலையத்துறை பதில் கொடுக்கவில்லை. மாற்றுத் திறனாளிகள் சமூகத்திலும், குடும்பத்தினர் மத்தியிலும் அவமதிப்பையும், நெருக்கடியையும் சந்திக்கின்றனர். குறிப்பாக மாற்றுத் திறனாளி இளம் பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கழிப்பறைக்குச் செல்வதற்கு கூட குடும்பத்தாரின் அவச்சொல்லை கேட்கும் நிலையில், சாப்பிடும் உணவைக் குறைத்துக் கொண்டதாக ஒரு இளம் பெண் மாற்றுத் திறனாளி சொன்னதைக் கேட்டு மனம் கலங்கிவிட்டது. இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்று, அவரது குடும்ப உறவினர்களே பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளும் கொடுமையை அவர்சொல்லி அழுதார். குடும்பம், சமுதாயம், அரசு ஆகிய அனைத்துக்கும் எதிராக போராட வேண்டிய நிலை மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளது. ஒன்றுபட்டு போராடி எல்லா மனிதர்களுக்கும் உரிய வாழ்வும், வாய்ப்பும் எங்களுக்கும் உண்டு என மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக எங்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது என்று ஜான்ஸிராணி கூறினார்.

இதைத்தொடர்ந்து புராணத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றி தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பேசினார். ராமாயணம், மகாபாரதம் உள்பட பண்டைய இதிகாசங்களில் சூழ்ச்சிசெய்யும் கூனி, சகுனி போன்றோரை மாற்றுத் திறனாளிகளாக காட்டி இருப்பதை சுட்டிக்காட்டி, சமுதாயத்தில் மாற்றுத் திறனாளிகள் பற்றி எதிர்மறையான பழமொழிகள் இருந்து வருவதையும் குறிப்பிட்டார். முன்னதாக இக்கருத்தரங்கிற்கு சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் பி.ராஜேஷ் தலைமை வகித்தார். மாநில மாநாட்டிற்கு பல்வேறு இடைக்குழுக்கள் வசூலித்த தொகை குறித்த விபரத்தை மாவட்டத் தலைவர் டி.ஜெயபால் அறிவித்தார். இந்த கருத்தரங்கில் வரவேற்பு குழுத் தலைவர் பிரபாகரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.