புதுச்சேரி,
புதுச்சேரி கடற்கரையில் நிழல் இல்லா நாள் குறித்த அரிய வானியல் நிகழ்வை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செவ்வாயன்று (ஆக. 21) கண்டு ரசித்தனர். தினமும் காலையிலும் மாலையிலும் பொருள்களின் நிழல் மிகவும் நீளமாக இருக்கும். சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல நிழல் சிறிதாகிக் கொண்டே வரும். சூரியன் மேற்கில் நகர ஆரம்பித்ததும் நிழல் மீண்டும் பெரிதாகிக் கொண்டே வரும். ஆனால், எல்லோரும் நினைப்பதைப்போல சூரியன் தினமும் பகல் 12 மணிக்கு வானில் நேர் உச்சிக்கு வருவதில்லை.

ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே சூரியன் நேர் உச்சியில் வரும். ஆக ஓரிடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே ‘நிழலில்லா நாள்’ என்கிறோம். புதுச்சேரியில் நிழல் இல்லா நாளாக செவ்வாயன்று (ஆக. 21) அறியப்பட்டது. இந்த வானியல் நிகழ்வு ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே இருக்கும் (2018 ஏப்ரல் 21 மற்றும் ஆகஸ்ட் 21) என புதுச்சேரி அறிவியல் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டு பரவலாக புதுவையில் பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியது. சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். புதுவையில் இந்த நிகழ்வை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் காணும் வகையில் புதுவை அறிவியல் இயக்கம் மிக விரிவான அளவில் புதுச்சேரி கடற்கரை, மேட்டுப்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி, காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர் நிலைப் பள்ளி, புனித லூயிஸ் டி கொன்சாக் உயர் நிலைப்பள்ளி, சத்தியா சிறப்புப் பள்ளி, உதவிக்கரங்கள், துளிர் இல்லங்கள் உட்பட பல இடங்களில் நேரடி செயல் விளக்கம் மூலம் மாணவர்கள், பொதுமக்கள் ஆர் வத்துடன் கண்டு ரசித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: