சியோனி;
பாலியல் துன்புறுத்தல் வழக்கை வாபஸ் பெறாத கல்லூரி மாணவி, பொதுமக்கள் முன்பாகவே கல்லால் அடித்தக் கொல்லப்பட்ட சம்பவம், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் சியோனி நகரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மகளிர் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு 23 வயது கல்லூரி மாணவி ஒருவர் படித்து வந்தார். இவரை அனில் மிஸ்ரா (38) என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

ஒருகட்டத்தில், தனக்கான பாலியல் துன்புறுத்தல் பற்றி, பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். இது அனில் மிஸ்ராவை ஆத்திரமடையச் செய்துள்ளது. இதையடுத்து, வழக்கை திரும்பப் பெறுமாறு மாணவியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் திங்களன்று மாணவி கல்லூரிக்கு சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற அனில் மிஸ்ரா, மாணவியின் முடியை பிடித்து இழுத்து சாலையோரம் தள்ளி, அருகில் கிடந்த பெரிய கல்லைத் தூக்கி மாணவி மீது போட்டுள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து சிலர் அனில் மிஸ்ராவை மடக்கிப் பிடித்துள்ளனர். அத்துடன், படுகாயம் அடைந்த மாணவியையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே மாணவி உயிரிழந்து விட்டார். போலீசார் தற்போது அனில் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.