===இ.எம் ஜோசப்===
நாட்டின் பண்டங்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்யும் துறை குறித்த புள்ளி விவரங்களை (Real Sector Statistics) ஆய்வு செய்வதற்காக, தேசிய புள்ளிவிவர ஆணையம் (National Statisitical Commission) அமைத்திருக்கும் ஆய்வுக்குழு, சில விவரங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த விவரங்களில் உற்பத்தி மட்டுமே இடம் பெறும். பரிவர்த்தனைகள் இடம் பெறா. இதற்காக மாற்றி அமைக்கப்பட்ட முந்தைய ஜி.டி.பி விவரங்களையும் இக்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருக்கிறது. இருப்பினும் இது இறுதி அறிக்கை அல்ல எனவும் கூறியிருக்கிறது.

எனினும், வெளிவந்திருக்கும் தரவுகளை (Data) வைத்துப் பார்த்தால், இன்றைய பா.ஜ.க கூட்டணியின் ஆட்சிக் காலத்தை விட, காங்கிரசின் ஐ.மு.கூ 1, ஐ.மு.கூ 2 ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது என்றதொரு செய்தி அந்த விவரங்களுக்குள் கிடைக்கிறது. இந்த புதிய ஜி.டி.பி எண்கள் 2004 – 05 ஆண்டிற்குப் பதிலாக 2011 – 12 ஆண்டினை அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்பட்டவை.

இது அரசியல் தளத்தில் விவாதத்தினை தூண்டியிருக்கிறது. இந்த திருத்தப்பட்ட எண்களின் அடிப்படையில், தங்கள் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்திருக்கிறது என காங்கிரஸ் உரிமை கொண்டாடி இருக்கிறது.

பா.ஜ.கவும் அதன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இந்த எண்களை வைத்து வாதத்தினை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். எனினும், அருண் ஜெட்லி விடுவதாய் இல்லை. ஐ.மு.கூ பத்தாண்டு ஆட்சியில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சிக்கு காரணம், அதற்கு முந்தைய 6 ஆண்டுக்கால வாஜ்பாய் அரசு உருவாக்கித் தந்திருந்த பின்புலமும் சாதகமான உலக நிலைமையுமே என்று ஒரே போடாய் போட்டு விட்டார்.
இதில் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.

ஒன்று, சுமார் 51 ஆண்டுகள் (1947 – 98) நடைபெற்ற ஆட்சிகளின் கேடுகளை ஆறு ஆண்டுகளில் வாஜ்பாய் அரசால் முறியடிக்க முடியும் எனில், பத்தாண்டு (2004 – 05) ஐ.மு.கூ ஆட்சியின் கேடுகளை, மோடி அரசால் ஏன் முறியடிக்க முடியவில்லை?

இரண்டு, நீங்கள் கூறுவது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். 6 ஆண்டுக் கால வாஜ்பாய் ஆட்சியின் முடிவில் ‘‘இந்தியா ஒளிர்கிறது’’ என்று பா.ஜ.க எழுப்பிய முழக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல், இந்திய மக்கள் அக்கட்சியினை ஆட்சியிலிருந்து அகற்றினார்களே, அது ஏன்?
ஐ.மு.கூ ஆட்சிக்கு உலகப் பொருளாதார நிலைமை சாதகமாக இருந்தது என்று சொல்கிறீர்கள். மோடியின் ஆட்சிக்காலத்தில், கடந்த நான்கு ஆண்டுகள், உலகச் சந்தையில் எண்ணெய் விலை படிக்குப் பாதியாய், மிகக் குறைந்து நமது இறக்குமதிச் செலவுகள் மலிவாகவும் அதன் பயனாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மிகக் குறைவாகவும் இருந்த சாதகமான காலம். இன்றைய உலக எதார்த்தத்தில், இதை விட உங்களுக்கு சாதகமாக இருக்கக் கூடியது என எதை எதிர்பார்க்கிறீர்கள்?

அருண் ஜெட்லி அவர்களே! நெஞ்சைத் தொட்டு பதில் சொல்லுங்கள்!

Leave a Reply

You must be logged in to post a comment.