திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்புக்காக புகார் கமிட்டி அமைத்து கண்காணிக்கவேண்டும் என தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தலைவர் கண்ணகி பாக்கியநாதன் செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.

திருப்பூரில், காங்கயம் சாலை தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் ரீடு நிறுவனம் இணைந்து நடத்திய நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்புக் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் பேசியதாவது: வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்வதற்காக நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அதிலும், குறிப்பாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளுக்கு பணிக்காக வெளிமாநில தொழிலாளர்களில் குறிப்பாக பெண்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். தற்சமயம் 40 சதவிகித வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது. குறிப்பாக இத்தொழிலாளர்கள் பீகார், ஒரிசா, ஜார்கண்ட், அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக பணிபுரிகிறார்கள். மேலும் இவர்கள் குடும்பத்தோடு வருவதால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.

மேலும், பாதுகாப்புச் சட்டம் 1979-ன்படி இவர்கள் அனைவரும் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் குறைவான எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், இத்தகைய தொழிலாளர்கள் அதிக நேர வேலையில் குறைந்த கூலி மற்றும் மொழி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வகையான உரிமைகளும் கிடைக்கும் வகையில் அனைத்து தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் தொழில் துறையினர் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும். மேலும், வேலை செய்கின்றவர்கள் முழு மனநிறைவுடன் தங்களது பணியினை மேற்கொள்ளும் போதுதான் தொழில் நிறுவனங்கள் தங்களது லாபத்தினை அதிக அளவு ஈட்ட முடியும். மேலும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த புகார்களை அந்நிறுவனத்தில் உள்ள புகார் குழுவிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் 10 பேர் பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில் கட்டாயம் புகார் கமிட்டி அமைக்கப்பட்டு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். இக்கமிட்டியில் 4 பெண்கள் மற்றும் 1 ஆண் உறுப்பினர்களை கொண்டதாக அமைக்கப்பட வேண்டும். இக்கமிட்டி விசாரணை செய்யமுடியாத பட்சத்தில் மாவட்ட அளவில் பல்வேறு துறைகளை சார்ந்த மாவட்ட குழு அலுவலர்களின் கீழ் செயல்படும். இதில் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இது போன்று தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைத்திட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, பெண் உரிமையும் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் குறித்த சிறப்பு கையேட்டினையும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் வெளியிட மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார். இந்தநிகழ்வின் போது, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை, மாவட்ட குழந்தை
கள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், ரீடு நிறுவன இயக்குநர் கருப்புசாமி மற்றும் திருப்பூர்,கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சமூக நல அலுவலர்கள், குழந்தை பாதுகாப்பு அலுவலர், தொழிற்சாலை ஆய்வாளர்கள், காவல் துறையினர் , தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் உள்ளிட்ட தொழிற்துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.