தீக்கதிர்

கொள்ளிடம் கரை உடைப்பால் வெள்ளக்காடாக மாறிய கிராமங்கள்..!

கடலூர்;
கொள்ளிடம் கரை உடைப்பால் ஊருக்குள் புகுந்த தண்ணீரால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடலூர் குமராட்சி ஒன்றியம். குடிநீர் இன்றி மக்கள் தவித்துவருகின்றனர். வீடுகள் தண்ணீரில் மூழ்கியும், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் மூழ்கியும் உள்ளதால் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கொள்ளிடத்தின் இரு கரைகளும் தொட்டவாறு சென்று கடலில் கலந்துவிடுகிறது. இதனால் பழைய கொள்ளிடத்தில் உடைப்பு ஏற்பட்டு கரையோரம் உள்ள பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளும் பல ஆயிரம் ஏக்கர் பயிர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

முழ்கிய பயிர்கள்!
கடலூர் மாவட்டத்தில் வல்லம்படுகை, கொள்ளிடம், எருக்கன்காட்டுபடுகை, வேளக்குடி, பழையநல்லூர், கண்டியாமேடு, சாலந்தோப்பு, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு ஒருவாரமே இருந்த நெற்பயிர், பொங்கல் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் மூழ்கி அழுகத் தொடங்கி உள்ளன.

கொள்ளிடக்கரை திட்டுகாட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி, பெராம்பட்டு உள்ளிட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்ததால் தீவுகளாக மாறியுள்ளன. கிராம மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வாழை, அரும்பு, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூஞ்செடிகளும், தோட்டப்பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன.

குடிநீர் இல்லை
பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து ஓடியதால் குடிநீர் மோட்டார், பைப் உள்ளிட்டவை மூழ்கி உள்ளன. இதனால் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. தீவனம் இல்லாமல் கால்நடைகளும் தவித்து வருகின்றன. இந்தக் கிராமத்தை சேர்ந்தவர்களே சிதம்பரம் நகராட்சிப் பகுதியிலிருந்து வாகனம் மூலம் குடிநீர் ஏற்பாடு செய்து தருகின்றனர்.

முதலையால் ஆபத்து
கொள்ளிடம் ஆற்றின் கரை உடைந்து கிராமத்திற்குள் புகுந்ததால் 300 க்கும் மேற்பட்ட முதலைகள் கிராமங்களுக்குள்ளும், வாய்க்கால்களுக்குள் புகுந்திருக்கக்கூடும் என உடையார்குடி கிராம மக்கள் கூறினர். இதனால், வெள்ள நீருக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தாலும் முதலைக்குப் பயந்து தூக்கத்தையும் தொலைத்துவிட்டோம் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

தலைவர்கள்
வெள்ளம் பாதித்த பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் மூசா, ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராமச்சந்திரன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைச் செல்வம், மாசிலாமணி, குமாராட்சி ஒன்றியச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.