கோவை,
வெள்ளத்தில் தவிக்கும் கேரளத்தை மீட்க நிவாரண நிதி, பொருட்களை அள்ளித்தந்து கோவை மற்றும் ஈரோடு மக்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள கேரள மக்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தினர் கோவையில் கடந்த இரு தினங்களாக வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 4 ஆயிரத்து 700 கிலோ அரிசி, 11 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாய்கள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குழந்தைகளுக்கான புத்தாடைகள், நைட்டிகள் மற்றும் சமையல் பாத்திரங்கள், நாப்கின்கள், குடங்கள், வேஷ்டிகள், வாட்டர் பாட்டில்கள், ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேகரித்தனர்.இப்பொருட்கள் அனைத்தையும் செவ்வாயன்று மாதர் சங்கத்தின் மாநில துணை தலைவர் என்.அமிர்தம், மாவட்டச் செயலாளர் ஏ.ராதிகா, தலைவர் எஸ்.அமுதா, பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில் இயங்கி வரும் வெள்ள நிவாரண முகாமிற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். முன்னதாக, கோவையில் இருந்து நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனத்தை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஜெயபாலன், அஜய்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சோமையம்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை மற்றும் பொதுமக்கள் சார்பாக சுமார் 1.5 லட்சம் மதிப்பிலான மருந்துகள், உடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வெள்ள நிவாரண மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, இப்பொருட்களை கொண்டு சென்ற வாகனத்தை சோமையம் பாளையம் ஊர் பெரியவர்கள் கே.கே.சாமி, கே.சி.காளிக்குட்டி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் என்.பாலமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கேசவமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட பன்னாரியம்மன் நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இதில் சிபிஎம் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால், வாலிபர் சங்க கிளை செயலாளர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நிவாரண நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த பணியில் ரூ.24 ஆயிரத்து 410 மற்றும் அரிசி,நாப்கின், வேஷ்டி, சட்டைகள் உள்ளிட்ட ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

இதேபோல் சிபிஎம் சிவானந்தபுரம் ஒன்றாவது கிளையின் சார்பில் 28 ஆயிரத்து 15 ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக சேகரிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் செல்லக்குட்டி, செல்லத்துரை, கனகராஜ், ரகுநாதன் உள்ளிட்
டோர் பங்கேற்றனர். மேலும், சிபிஎம் சிவானந்தபுரம் 2 ஆவது கிளையின் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இதேபோல், கோவை விளாங்குறிச்சி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்கத்தினர் வெள்ள நிவாரண பொருட்களை சேகரித்தனர். இதில் ரூ.15 ஆயிரம் நிதி மற்றும் அரிசி, போர்வை, வேஷ்டி, சேலை, தண்ணீர் உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை சேகரித்து கேரள மாநிலத்திற்கு அனுப்பினர். இந்நிகழ்ச்சியில் கட்சியின் எஸ்எஸ்குளம் ஒன்றியக்குழு செயலாளர் ஆர்.கோபால் மற்றும் விளாங்குறிச்சி கிளை நிர்வாகிகள் சண்முகம், மூத்த தோழர் சுப்பிரமணி மற்றும் மாதர்சங்க நிர்வாகி ராமாத்தாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் வெள்ள நிவாரண நிதியை சேகரித்தனர். இதில் சங்கத்தின் தலைவர் பரமசிவன், பொதுச்செயலாளர் வேளாங்கன்னிராஜ், பொருளாளர் கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் கோவையில் உள்ள அதிவிரைவுப்படை காவல்துறையினர் வெள்ள நிவாரண பொருட்களை சேகரித்து கேரள மாநிலத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருள்களை சேகரித்து கேரள மாநிலத்திற்கு அனுப்பினர். இதில் சிபிஐ மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாணவர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் பூர்ணிமா நந்தினி, மாவட்ட செயலாளர் எம்.குணசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு:
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் சார்பாக பல்வேறு ஜவுளி பொருட்கள் நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள், போர்வைகள், சட்டைகள்,டி சர்ட் போன்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருள்களை எர்ணாகுளம் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சத்தி மலைக்கமிட்டி சார்பில் கமிட்டி உறுப்பினரும், திங்களூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான எம்.மாதேஸ் கேரளா வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமனிடம் அளித்தார். இதில் மலைக்கமிட்டி செயலாளர் சி.துரைசாமி, நிர்வாகிகள் அஜித், சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.அந்தியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரூ.19 ஆயிரத்து 704 நிதி மற்றும் 14 சிப்பம் அரிசி, சேலைகள், வேஷ்டிகள், பெட்ஷீட், துண்டு, பேண்ட், சர்ட், தண்ணீர் பாட்டில்கள் என பல்வேறு பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், கொடுமுடி பகுதியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயராகவன் மற்றும் சிவலிங்கம் தலைமையில் நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது. மேலும், பெருந்துறையில் வாலிபர் சங்கத்தினர் மேற்கொண்ட வெள்ள நிவாரண நிதி வசூலில் ரூ.19 ஆயிரம் சேகரிக்கப்பட்டது. இதில், தாலுகா செயலாளர் வி.எ.விஸ்வநாதன், மாவட்ட அமைப்பாளர் சகாதேவன் உட்பட பலர் பங்கேற்றனர். ஈரோடு பேருந்து நிலையத்தில் ஈரோடு நகரக்கமிட்டி சார்பில் நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது. இதில் சிபிஎம் நகர செயலாளர் சுந்தரராஜன், போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் கனகராஜ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பொன்.பாரதி, நகரக்கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வெள்ள நிவாரண சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.