தீக்கதிர்

கல்விக்காக சேர்த்த நிதியை கேரள நிதிக்கு கொடுத்த மாணவிகள்

மதுராந்தகம்,
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகள்கள் பவித்திரா, தாரணி ஆகியோர் செங்கல்பட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் பெற்றோர்கள் தரும் சிறுதொகையை கல்விக் கட்டணத்திற்காக உண்டியலில் சேமித்து வைப்பது வழக்கம். மாணவிகளுக்கு இந்த தொகை பள்ளிக் கட்டணத்திற்கு உதவியாக இருந்தது. இந்நிலையில் கேரளாவில் பெரும் மழையால் அங்குள்ள பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் பாதிக்கப்பட்டதை அறிந்த மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள நிவாரணத்திற்கு கொடுக்க முன்வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளதை அறிந்த மாணவிகள் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ராஜாவிடம் தாங்கள் சேமித்து வைத்திருந்த 2171 ரூபாயை கடந்த திங்களன்று (ஆக. 20) வழங்கினர்.  கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளார் கே.வாசுதேவன், பழையனூர் கிளைச் செயலாளார் வனிதாமணி, தந்தை பழனி உள்ளிட்ட பலர் அப்போது உடனிருந்தனர்.

“கேரளாவில் எங்களைப் போன்ற பள்ளி மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை தொலைக்காட்சியில் பார்த்து எங்கள் சேமிப்பை கொடுக்க முன்வந்துள்ளோம். இதேபோல் மற்ற மாணவர்களும் உதவ வேண்டும் என்று பவித்ரா, தாரணி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.