கோவை,
புதிய ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள என்டிசி பஞ்சாலை தொழிலாளர்கள் செவ்வாயன்று காதில் பூ வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய பஞ்சாலைக்கழகத்தின் (என்டிசி) கீழ் தமிழகத்தில் ஏழு பஞ்சாலைகள் இயங்கி வருகிறது.இதில் நிரந்தர மற்றும் ஒப்பந்ததொழிலாளர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றனர். இவர்களின் ஊதிய ஒப்பந்த காலம் கடந்த மே 31ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து புதிய ஊதிய உயர்வு கோரிக்கைகளாக நிரந்தர தொழிலாளர்கள் ஏற்கனவே பெற்றுவரும் அடிப்படை சம்பளத்துடன்கூடுதலாக ஆயிரம் ரூபாய் கணக்கிட்டு வழங்க வேண்டும். வருடாந்திர உயர்வாக புதிய அடிப்படை சம்பளத்தில் 10 சதவிகிதம் வழங்க வேண்டும். மேலும், மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட குழு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.600 என்பதை என்டிசி பஞ்சாலைகளில் பணியாற்றும் அனைத்து தினக்கூலித் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். 480 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் உள்ளிட்ட அனைத்து பஞ்சாலை தொழிற்சங்கங்களும் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால், தொழிற்சங்கங்களின் கோரிக்கையை மத்திய அரசின் ஜவுளித்துறையின் கீழ் இயங்கும் என்டிசி நிர்வாகம் ஏற்கவில்லை. இதனையடுத்து ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் அறை கூவல் விடுத்தது. இதன்படி திங்களன்று அனைத்து பஞ்சாலைகளிலும் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர்.இதன் தொடர்ச்சியாக செவ்வாயன்று கோவை ஸ்டேன்ஸ்மில் பஞ்சாலை தொழிலாளர்கள் காதில் பூ வைத்படி ஆலை வாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு,எல்பிஎப், எச்எம், ஐஎன்டியுசி உள்ளிட்ட சங்கங்களை சார்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: