புதுதில்லி;
2019 மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிற்கும்பட்சத்தில் பாஜக தோற்பது உறுதி என்பது, ‘இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் மூட் ஆப் த நேஷன்’ நடத்திய கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் அதிகபட்சமாக 64 சதவிகிதம் வாக்குகளை பெறும் நிலையில், பாஜக-வுக்கு வெறும் 36 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.தற்போதுள்ள சூழலில்- தேர்தல் நடைபெற்றால் பாஜக கூட்டணிக் கட்சிகள் 36 சதவிகித வாக்குகளுடன் மொத்தமாக 281 இடங்கள் வரை பெறலாம். அதாவது 2014 தேர்தலின் போது பாஜக-வுடன் இருந்த கூட்டணி கட்சிகள் அப்படியே தொடரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை கிடைக்கும். இதற்கு, சிவசேனா, தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகளும் இருக்க வேண்டும்.

அதேபோல 2014 தேர்தலில் இருந்த கூட்டணியோடு காங்கிரஸ் கட்சி தற்போது போட்டியிட்டால், அந்த கூட்டணி 31 சதவிகித வாக்குகளுடன் 122 இடங்களைப் பிடிக்கும். மற்ற கட்சிகள் 33 சதவிகித வாக்குகளுடன் 140 இடங்களைப் பெறும்.மாறாக, எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்தித்தால், பாஜக கூட்டணிக்கு 281 இடங்கள் என்பது கனவாகி விடும். குறிப்பாக, காங்கிரஸ் தனது கூட்டணியை விரிவுபடுத்தி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து நின்றாலே 41 சதவிகித வாக்குகளை அள்ளிவிட முடியும் என்று இந்தியா டுடே கூறுகிறது. அந்தச் சூழலில் பாஜக-வுக்கு 36 சதவிகித வாக்குகளும், மற்றவர்களுக்கு 23 சதவிகித வாக்குகளும் கிடைக்கும் என்பது இந்தியா டுடே கூறுவதால், பாஜக தோல்வி உறுதியாகி விடுகிறது.

ஒருவேளை எதிர்க்கட்சிகள் ஒன்றிணையா விட்டாலும்கூட பாஜக வெற்றிபெற முடியாது என்பதுதான் உண்மை. ஏனெனில், கடந்த தேர்தலில் பாஜக மட்டும் 282 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மை பெற்றிருந்த நிலையில், தற்போது கூட்டணிக்கே அந்த 282 இடங்கள் கிடைக்காது என்றால், அது பாஜக-வுக்கு முக்கியமான எச்சரிக்கையே ஆகும்.மேலும் இந்த இடங்களைப் பெறுவதற்கும் சிவசேனா, தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் வேண்டும் எனும்போது, நிச்சயமாக 200 இடங்களைக் கூட பாஜக கூட்டணி பெறாது என்று உறுதியாக சொல்லலாம். கருத்துக் கணிப்புக்களும் அதையே காட்டுகின்றன.பொதுவாக ‘இந்தியா டுடே’ பத்திரிகை, பாஜக சார்பானது என்பதையும் கருத்தில் கொண்டு – அந்த பத்திரிகையே, இவ்வளவுதான் பாஜக-வின் செல்வாக்கு என்று மதிப்பிடுகிறது என்றால், நிஜத்தில் பாஜகவின் தோல்வி படுதோல்வியாகவே இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

Leave A Reply

%d bloggers like this: