தீக்கதிர்

வயநாடு மக்களுக்கு வாரி வழங்கிய நீலகிரி…!

உதகமண்டலம்;
கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுவோம் என்ற அறைகூவலுடன் நீலகிரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கடந்த மூன்று தினங்களாக பொதுமக்களிடம் நிவாரண உதவிகள் பெறப்பட்டன. இதில் பத்து டன் அரிசி, இரண்டு டன் அளவுள்ள பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உட்பட சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இப்பொருட்கள் அனைத்தும் வயநாடு மாவட்டத் தலைநகரான கல்பேட்டாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, மார்க்சிஸ்ட் கட்சியின் வயநாடு மாவட்டக்குழு அலுவலகத்தில் இயங்கி வரும் நிவாரண உதவி மையத்தில் ஒப்படைக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியின் வயநாடு மாவட்ட செயலாளர் ககாரின், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ரஃபீக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முன்னதாக, இந்த நிவாரணப் பொருட்களை மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் தலைமையில் சென்ற கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.யோஹண்ணன், வாலிபர் சங்க மாவட்டத்
தலைவர் டி.மணிகண்டன், சேரங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் பி.தமிழ்மணி ஆகியோர் வழங்கினர்.