சென்னை,
லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநருக்கு அடுத்த பொறுப்பில் உள்ள ஒரு உயர் அதிகாரி தனக்கு கீழ் பணியாற்றிவரும் பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்து வருவது தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பெண் எஸ்.பி.க்கு அந்த அதிகாரி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பலமுறை அந்த அதிகாரி, உயர் அதிகாரியை எச்சரித்து வந்துள்ளார். அந்த எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஜெயந்த் முரளியிடம் அந்த பெண் அதிகாரி புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயர் அதிகாரியின் பாலியல் தொந்தரவும் அதிகரித்தே வந்தது. அதிகாரிகள் மீட்டிங் நடக்கும் போதும், போன் பேசும் போதும் தனிப்பட்ட முறையில் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.இதனால் டிஜிபி மற்றும் உள்துறை செயலாளரிடம் 10 நாட்களுக்கு முன்பு பெண் எஸ்பி புகார் அளித்தார். அந்த புகாரின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தான் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் முதல்வரின் செயலாளர் விஜயகுமார், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரிடம் முறையிட்டார்.

முதல்வரின் அலுவலகத்தில் இருந்து இந்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உள்துறை செயலாளருக்கும், டிஜிபிக்கும் விளக்கம் கேட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பெண் போலீஸ் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் கூடுதல் டிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி, ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி சரஸ்வதி, டிஜிபி அலுவலகத்தில் உள்ள மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் கொண்ட கமிட்டி அவசர அவசரமாக அமைக் கப்பட்டது. இந்த கமிட்டி விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கும். காவல் துறையில் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட முதல் கமிட்டியே இதுதான். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் 1997ல் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க செயலாளர் அந்தஸ்தில் (மூத்த ஐஏஎஸ்) விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். தமிழக காவல் துறையில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் முதல் முறையாக புகார் அளித்துள்ளதால் இந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த கமிட்டி குறித்து தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஏடிஜிபி அருணாசலம், டிஐஜி தேன்மொழி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிக்கு மிகவும் நெருங்கியவர்கள், சிபிஐயில் ஒன்றாக பணியாற்றியவர்கள். இதனால் விசாரணை முறையாகவும், நேர்மையாகவும் நடைபெறுமா என்ற சந்தேகத்தை பெண் போலீஸ் அதிகாரிகள் எழுப்பி உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.