புதுதில்லி;
ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.கடந்த வாரத்தில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ. 70 ரூபாய் 32 காசுகளாக குறைந்த நிலையில், தற்போது பல்வேறு சர்வதேசக் காரணிகளால் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மூடீஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வைஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான ஜாய் ரன்கோத்கே, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “2017-18 நிதியாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவிகிதமாக இருந்த நிலையில், நடப்பு 2018-19 நிதியாண்டில் 2.5 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது; கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டில் எண்ணெய் அல்லாத பொருட்கள் இறக்குமதிக்கான அதிக தேவை போன்ற காரணங்களால் இந்த சூழல் உருவாகக் கூடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல, ஐஎச்எஸ் மார்க்கிட் நிறுவனத்தின் மூத்த பொருளாதார வல்லுநரான ராஜிவ் பிஸ்வாஸ் அளித்துள்ள பேட்டியில், “2017-18 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எண்ணெய் இறக்குமதியின் பங்கு 2.6 சதவிகிதமாக இருந்தது; இது நடப்பாண்டில் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அமெரிக்க டாலருக்கு இணையான பல்வேறு நாடுகளின் மதிப்பு சரிந்து வருகிறது; குறிப்பாக, இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவுகள் அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்தியப் பொருளாதாரத்தில், ரூபாய் மதிப்பு சரிவானது நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ நிறுவனத்தின் முதன்மைப் பொருளாதார வல்லுநரான சுனில் சின்ஹா ஏற்கெனவே கணிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.