2002ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதியன்று கோவாவில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அடல் பிகாரி வாஜ்பாய் பேசிய பேச்சு, அண்மைக்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கிய முஸ்லீம்களால் உருவாகிய ஹிந்து தேசம் என்பதாக இந்தியாவை முன்னிறுத்திய கோல்வால்க்கர் – சாவர்க்கர் கருத்தாக்கங்களின் விரிவுரையாகவே இருந்தது. கோத்ராவில் நடைபெற்றவற்றை நியாயப்படுத்துகின்ற வகையில் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லீம்களின் படுகொலைகளைக் குறிப்பிட்டது மட்டுமல்லாமல், முஸ்லீம்களிடம் இருந்த ’சகிப்புத்தன்மையின்மை’, ஹிந்துக்களிடம் இருப்பதாகக் கூறப்படும் பாரம்பரிய சகிப்புத்தன்மையோடு முரண்படுவதாக இருப்பதாகவும் அந்தப் பேச்சின் போது பிரதமர் குறிப்பிட்டிருந்தார். ஹிந்துக்கள் மட்டுமே உண்மையான இந்தியர்கள் என்று நம்பிய கோல்வால்கரைப் போலவே, வாஜ்பாயும் ‘நாம்’, ‘நமது’, ‘ஹிந்துக்கள்’, ‘இந்தியர்கள்’ என்ற வார்த்தைகளை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தும் வகையிலேயே பேசினார். பண்டைய கம்போடியாவில் இருந்த ஹிந்து ராஜ்ஜியங்களைப் பற்றிப் பேசியே அவர் தன்னுடைய உரையைத் துவங்கினார்.  “பிற மன்னர்களைத் தாக்குகின்ற போது, எந்தக் கோயிலையும் அழிக்கின்ற அல்லது தெய்வங்களின் சிலைகளைச் சேதப்படுத்துகின்ற செயல்களை எந்தவொரு மன்னரும் செய்ததில்லை. இதுதான் நமது கலாச்சாரம். அனைவருடைய நம்பிக்கையையும் சமமாக நடத்துகிற நம்முடைய கண்ணோட்டம்”  என்று கூறிய அவர்,

“முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நமது மண்ணில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாக, இந்தியா மதச்சார்பற்றதாகவே இருந்தது. அவர்கள் இங்கே வந்தவுடன் தங்களுக்கான வழிபாட்டு சுதந்திரத்தைப் பெற்றனர். பலவந்தமாக அவர்களை மதம் மாற்றும் எண்ணம் யாரிடமும் இருக்கவில்லை. ஏனென்றால் நமது மதத்தில் அதுபோன்ற செயல்கள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. மேலும் நம்முடைய கலாச்சாரத்தில் அவ்வாறான செயல்பாடுகளுக்கு எவ்விதப் பயன்பாடும் இருந்ததில்லை” என்றும் அவர் கூறினார்.

இங்கே, நமது மதம் என்று அவரால் அழைக்கப்படுகின்ற ஹிந்து மதம் மற்றும் ஹிந்துக்களிடம் சகிப்புத்தன்மை இருப்பதாகவும், முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அந்த சகிப்புத்தன்மை இல்லை என்றும் கூறி முரண்பாடுகளை உருவாக்க அவர் முயற்சிக்கிறார். சிலைகளை அழிப்பது, பலவந்தமாக மதம் மாற்றுவது போன்றவை ஆர்எஸ்எஸ் படையினரால் பயன்படுத்தப்படுகின்ற நிலையான வாதமாகும். வளர்ந்து வருகின்ற இத்தகைய சகிப்புத்தன்மை பெரிய வன்முறைச் சம்பவங்களின் வேராக இருக்கிறது என்று அவர் கூறினார். சகிப்புத்தன்மையுள்ளவர்களாக ஹிந்துக்கள் வரையறுக்கப்படுவதால், இந்த வளர்ந்து வருகின்ற சகிப்புத்தன்மை என்பது முஸ்லீம்களிடம் இருப்பதாகவே உள்ளது என்பது மிகத் தெளிவான அனுமானமாக இருக்கிறது.

அன்றைய தினம் எரிந்து கொண்டிருந்த பிரச்சினையின் பக்கம் உடனடியாகத் திரும்பிய அவர் ”குஜராத்தில் என்ன நடந்தது? சபர்மதி எக்ஸ்பிரஸில் இருந்த அப்பாவி பயணிகளை உயிருடன் எரிப்பதற்கான சதி வேலை செய்யப்படவில்லை என்றால், குஜராத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட துயரங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். அந்தக் குற்றவாளிகள் யார்? அரசாங்கம் இதை விசாரித்து வருகிறது. புலனாய்வு அமைப்புகள் அனைத்து தகவல்களையும் சேகரித்து வருகின்றன. ஆனால், குஜராத்தின் துயரங்கள் எப்படி தொடங்கின என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அடுத்தடுத்து நடைபெற்ற நிகழ்வுகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் கண்டிக்கப்பட வேண்டியவையாகவே இருந்தன, ஆனால் தீயைப் பற்ற வைத்தது யார்? அந்த தீ எப்படி பரவியது?” என்று கேட்டார்.

நரேந்திர மோடி முன்னர் வெளிப்படையாகக் கூறியதைப் போல அல்லாமல், நியூட்டனின் மூன்றாவது விதி பற்றி தனது பாணியில் வாஜ்பாய் விவரித்தார். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றது பற்றி எந்தவித வருத்தத்துடனோ, அரசாங்கம் தன்னுடைய குடிமக்களைப் பாதுகாக்கத் தவறியதற்கு மன்னிப்பு கோரும் வகையிலோ அவருடைய பேச்சு இருக்கவில்லை. கோத்ரா தாக்குதலுக்கு காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குஜராத்தில் அதைத் தொடர்ந்து நடந்த துயரச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் காட்டுவதற்கான முயற்சிகளை அவர் தன்னுடைய உரையில் மேற்கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரை, உறுதிநிலையற்ற முஸ்லீம்கள் ஒன்றிணைந்தே அந்த தீயை வைத்தனர். அவர்கள் மீது மட்டுமே குற்றம் சுமத்தப்பட வேண்டுமே தவிர, அதற்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளில் ஈடுபட்ட தன்னுடைய கட்சியைச் சார்ந்தவர்கள் மீது அல்ல என்பதே அவருடைய நிலைப்பாடாக இருந்தது.

பொதுவாகப் பார்த்தால், முஸ்லீம்கள் மீது தாக்குதலைத் தொடுத்தவராகவே வாஜ்பாய் இருந்தார்.  “நம்மைப் பொறுத்த வரை கோவாவில் இருந்து கௌகாத்தி வரைக்கும் இந்திய மண் என்பது ஒன்றுதான். இந்த மண்ணில் வாழும் அனைவரும் ஒன்றுதான். மத தீவிரவாதத்தை நாம் நம்பவில்லை. இன்று நமது நாட்டின் மீதான அச்சுறுத்தல் என்பது பயங்கரவாதத்திலிருந்து வருவதாகவே இருக்கிறது” என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

இந்த நாம் என்பது யார்? நம்முடைய தேசத்திற்கான அச்சுறுத்தல் என்பது உண்மையில் எங்கிருந்து வருகிறது? அவர் ஆற்றிய ஹிந்தி உரை அது குறித்ததொரு குறிப்பை வழங்குகிறது. ”மத தீவிரவாதத்தை நாம் நம்பவில்லை; அதனை முஸ்லிம்கள்தான் நம்புகிறார்கள்” என்று பேசிய போது, மத தீவிரவாதம் என்பதற்கு வாஜ்பாய் வேண்டுமென்றே உருது வார்த்தையான ‘மஜாபி’ (‘ஹிந்தி வார்த்தையான தர்மிக் என்பதற்குப் பதிலாக) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அவர் பயன்படுத்திய சரியான வார்த்தைகள் ‘ஹம் மஜாபி கத்தாத்தா மெயின் விஷ்வாஸ் நஹின் கர்த்தே’ என்பதாக இருக்கின்றன. இந்த வாக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட மஜாபி என்ற வார்த்தை மட்டுமே உருது மொழியைச் சேர்ந்தது என்பது ஒன்றும் தற்செயலானதல்ல. ஹிந்து மதத்தை குறிக்கின்ற வகையில் மதம் குறித்த நேர்மறையான குறிப்பு எப்போது வந்தாலும், தர்ம என்று வார்த்தையும், அந்தக் குறிப்பு எதிர்மறையானதாக இருக்கும் போது, மஜாப் என்ற வார்த்தையும் சங்பரிவார படைப்புகள் மற்றும் பிரச்சாரங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. தீவிரவாதம் என்பதை இஸ்லாம் என்ற வார்த்தைக்கு இணையானது என்பதாக அதாவது ‘தீவிரவாத இஸ்லாம்’ என்பதாக வாஜ்பாய் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் தீவிரவாத இஸ்லாம் மற்றும் சகிப்புத்தன்மையுள்ள இஸ்லாம் என்ற வேறுபாட்டை முதலில் ஏற்படுத்துகின்ற அவர் அதற்குப் பின், அனைத்து முஸ்லீம்களையும் பரவலாக பொதுமைப்படுத்தி, “”முஸ்லீம்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் மற்றவர்களுடன் ஒத்துழைக்கவோ அல்லது இணைந்து வாழவோ விரும்புவதில்லை. சமாதான முறையில் தங்கள் கருத்துக்களைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்குப் பதிலாக, பயங்கரவாதம், அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி தங்களுடைய நம்பிக்கையைப் பரப்ப விரும்புகிறார்கள். இந்த ஆபத்து குறித்து உலகம் எச்சரிக்கை அடைந்திருக்கிறது” என்று கூறுகிறார்.

வெறுப்பு பேச்சிற்கான மிகச் சிறந்த உதாரணமாக அவருடைய இந்தப் பேச்சு இருக்கிறது. அவருடைய பேச்சு பெரிய சர்ச்சையை உருவாக்கிய பிறகு, தனது கருத்துக்கள் அனைத்து முஸ்லீம்களையும் நோக்கித் தெரிவிக்கப்படவில்லை என்றும் தீவிரவாத முஸ்லீம்களுக்கு எதிராக மட்டுமே இருந்ததாக வாஜ்பாய் விளக்கமளித்தார். பின்னர் பிரதமரின் அலுவலகத்திலிருந்து ”எங்கு” மற்றும் ‘முஸ்லிம்கள் வாழ்ந்தாலும்’ என்ற வார்த்தைகளுக்கிடையே ‘அத்தகைய’ ‘என்ற வார்த்தையைத் திணித்து வாஜ்பாயியின் பேச்சு வெளியிடப்பட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட பதிப்பையே பல செய்தித்தாள்களும் பின்னர் வெளியிட்டன. 2002 மே 1 அன்று பாராளுமன்றத்தில் அவ்வாறு திருத்தப்பட்ட பேச்சே உண்மையானது என்று வாஜ்பாய் தெரிவித்ததற்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டு, ‘அத்தகைய’ என்ற வார்த்தை அவருடைய பேச்சின் இடையே வேண்டுமென்றே இடைச்செருகல் செய்யப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ளும்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். இருந்த போதிலும், ”இஸ்லாம் போதிக்கின்ற சகிப்புத்தன்மை மற்றும் கருணை ஆகியவற்றிற்கு நான் செலுத்திய அஞ்சலியைப் பற்றியும், என்னுடைய குறிப்பு தீவிரவாத இஸ்லாமை பின்பற்றுபவர்களை மட்டுமே நோக்கி இருந்தது பற்றியும் என்னுடைய முழு உரையை வாசித்த எவரும் சந்தேகப்பட மாட்டார்கள்” என்று வாஜ்பாய் வலியுறுத்திக் கூறினார்.  

முஸ்லீம்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் மற்றவர்களுடன் ஒத்துழைக்கவோ அல்லது இணைந்து வாழவோ விரும்புவதில்லை என்பது ஆர்எஸ்எஸ் பிரச்சாரங்களில் இருக்கின்ற அடிப்படைக் கோட்பாடாகும் என்பதால், தீவிரவாத முஸ்லீம்களை மட்டுமே தான் குறிப்பிட்டதாகக் கூறுகின்ற வாஜ்பாயின் கூற்று நம்பத்தகுந்ததாக இல்லை. முன்பாக, தனது உரையில் பயங்கரவாதத்தை தீவிரவாத இஸ்லாமிற்கு இணையாக வைத்து அவர் பேசியிருந்தார். ‘மற்றவர்களுடன் இணைந்து வாழ்வதில்லை’ என்பது பயங்கரவாதிகளுக்கு எதிராக வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு ஆகும். எப்படியிருப்பினும், பிரதமர் ஒருவர் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களின் குணங்களாக கூறுவது, அதுவும் அவருடைய சங் பரிவாரம் குஜராத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அவ்வாறு கூறுவது பொருத்தமற்றதாகவே இருக்கிறது. முஸ்லீம் சமூகத்தை தனிமைப்படுத்துவது என்பதே ஆர்எஸ்எஸ்சின் கொள்கையாக இருக்கின்ற போது, முஸ்லீம்கள் மீது இவ்வாறு குற்றம் சாட்டப்படுவது  எந்த வகையிலும் நியாயமற்றதாகவே இருக்கிறது, குஜராத்தில் ஹிந்து பெரும்பான்மைப் பகுதிகளில் வாழுகின்ற முஸ்லீம்கள் மக்களைத் தேர்ந்தெடுத்து சங் பரிவாரம் வன்முறைகளை ஏவியதென்பது ஒன்றும் தற்செயலான நிகழ்வு அல்ல என்று சமூகவியலாளரான திருபாய் சேத் தனது வாதங்களை முன்வைக்கிறார். முஸ்லீம்களை தேசிய நீரோடையில் இணைய மறுப்பவர்கள் என்று கூறுகின்ற, அதே நேரத்தில் முஸ்லீம் மக்கள் எழுந்து வருகின்ற போது அவர்களைத் திரும்பவும் அவர்களுடைய பகுதிக்கு விரட்டி விடுகின்ற ஹிந்துத்துவவாதிகளின் நேர்மையற்ற செயலை வெளிப்படுத்தியதாகவே மாநிலத்தில் நடத்தப்பட்ட அந்த இனவாதப் படுகொலைகள் இருந்தன.

கோவாவில் தான் தெரிவித்த கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கங்களைக் குறைக்கின்ற வகையில் எடுக்கப்பட்ட மற்றொரு முயற்சியாக, பாராளுமன்றத்தில் பேசிய வாஜ்பாய், தீவிரவாத இஸ்லாமிற்கு எதிராக இருப்பதைப் போலவே, தீவிரவாத ஹிந்துக் கொள்கைகளுக்கு எதிரானவனாகவும் தான் இருப்பதாகக் கூறினார். ”சுவாமி விவேகானந்தர் முன்வைத்த ஹிந்துத்துவாவை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இப்போது பரப்பப்படுகின்ற ஹிந்துத்துவா பிரச்சாரம் தவறானதாக இருக்கிறது. ஒவ்வொருவரும் அதுகுறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று சொன்ன அவர், இத்தகைய விளைவுகளை எதிர் கொள்வதற்கு சட்டங்கள் இருப்பதாகவும், எந்தவொரு ஹிந்து அமைப்பும் நாட்டின் ஒற்றுமைக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் இருக்காது என்று தான் உறுதியாக நம்புவதாகவும் கூறியதன் மூலம், மீண்டும் தன்னுடைய பழைய நிலைமைக்கே சென்றார். அவர் கூறியதை வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், முஸ்லீம் (அல்லது கிறிஸ்துவ அல்லது சீக்கிய) அமைப்புகள் மட்டுமே நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றன என்றே அவர் கூறியதாகக் கொள்ளலாம்.

ஹிந்துத்துவாவைப் பற்றியோ, ஹிந்துமதக் கொள்கைகள் பற்றியோ எதுவும் பேசிடாத விவேகானந்தருக்கு அவதூறு ஏற்படுத்திய வாஜ்பாய் நேரடியாக கோல்வால்கர் மற்றும் சாவர்க்கரின் போதனைகளையே பேசினார்.

சங் பரிவாரத்தின் வழக்கமான பேரினவாத வழிக்குத் திரும்பிய வாஜ்பாய், அந்த விவாதத்தை ஒரு முட்டுச்சந்திற்குத் திசை திருப்பினார். தனிப்பட்ட முறையில் தீவிரவாத இஸ்லாம் அல்லது தீவிரவாத ஹிந்து மதத்தை அவர் எதிர்க்கிறாரா இல்லையா என்பது பிரச்சனை அல்ல; அனைத்து இந்தியர்களுக்கும் அரசியலமைப்புச் சட்டம் தந்திருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நாட்டின் பிரதமராக அவர் தயாராக இருக்கிறாரா என்பதுதான் உண்மையான பிரச்சனை. தன்னுடைய சொந்தக் கருத்துக்கள், நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும், ஒரு பிரதமர் தன்னுடைய குடிமக்களில் ஒரு பகுதியினரை மட்டுமே சார்ந்து பேச முடியாது. குஜராத்தில் இருக்கும் முஸ்லீம்கள் பாதுகாப்பு உரிமை பெற்றவர்களாக இருக்கின்றார்களா? குற்றங்களைச் செய்தவர்களுடைய அரசியல் அல்லது கருத்தியல் தொடர்பில்லாமல் அவர்களைத் தண்டிக்க அவர் தயாராக இருக்கிறாரா? இந்த விவகாரங்களைக் கையாள்வதற்குப் பதிலாக, தனது சொந்த அரசியல் தோல்வியையும், தன்னிடமிருக்கும் குற்றத்தையும் மறைக்கவே வாஜ்பாய் முயல்கிறார்.

சங் பரிவார் குஜராத்தில் வெளிப்படையாக தங்களுடைய சுதந்திரத்தை அனுபவித்த எழுபத்திரண்டு மணி நேரம் கழித்து, 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி வாஜ்பாய் தன்னுடைய முதல் தொலைக்காட்சி உரையை ஆற்றியது குறிப்பிடத்தக்கது. அப்போதும்கூட அவரால் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை வேண்டும் என்ற வேண்டுகோளையே முன்வைக்க முடிந்தது. இணக்கமாக இல்லை என்பதை மாநிலத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்குக் காரணமாக கூறியது என்பது, உண்மையில் குஜராத்தின் சாதாரண மக்கள் மீது குற்றம் சாட்ட முயன்றது என்பது, தன்னையும், தன்னுடைய கட்சியின் சக ஊழியர்களையும், தங்களுடைய அதிகாரத்தின் கீழ் இருக்கும் அரசாங்கத்தையும் செய்த குற்றங்களுக்கு பொறுப்பேற்காமல் இருக்கும் வகையில் நடத்தப்பட்ட கபட நாடகமாகவே இருந்தது. அப்பாவி குடிமக்களின் படுகொலையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு, அவர்களிடமே சகிப்புத்தன்மையின் நற்பண்புகளை பிரசங்கித்த பிரதமர்களின் வரிசையில் 1984 நவம்பரில் ராஜீவ் காந்தி. 1993 ஜனவரியில் நரசிம்மராவ் ஆகியோர் சேர்ந்ததைப் போல வாஜ்பாயும் சேர்ந்து கொள்கிறார். இனப்படுகொலைக் கும்பல்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும், மக்களின் உயிரையும், சுதந்திரத்தையும் காப்பாற்றத் தவறிய காவல்துறையினர் தண்டிக்கப்படுவர் என்று குஜராத் மக்களிடம் சொல்வதற்கு தேசியத் தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மத நல்லிணக்கத்திற்கான தேவை இருப்பதாக ஒரு பிரசங்கத்தையே வாஜ்பாய் நடத்தினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அல்லது கொலைகாரர்கள் மீது கோபம் அல்லது வசை என்று எதுவுமே அவரது உரையில் இருக்கவில்லை. வன்முறை என்பது தேசத்தின் நெற்றியில் இடப்பட்ட கருப்பு புள்ளியாக இருப்பதாகக் கூறிய அவரால், ரயிலை எரித்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே தண்டனை, கோத்ராவில் முஸ்லீம்கள் மீது பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டோருக்கும் வழங்கப்படும் என்று சொல்ல முடியவில்லை.

நடத்தப்பட்ட அந்த வன்முறைகள் செயல்பட வேண்டிய அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கேலி செய்திருந்த போதிலும், சட்டத்தை நிறைவேற்றுகின்ற அதிகாரம் கொண்ட பிரதமரின் அதிகாரத்திற்குச் சவால் விடுத்தவர்களுக்கு எதிராக எந்தவிதமான எச்சரிக்கையையும் அவர் அளிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் அவருடைய மூத்த உதவியாளர்கள் உலக வர்த்தக மைய பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் முஸ்லீம்கள், அரேபியர்கள் மற்றும் பிற குடியேறிகளைத் தாக்கியவர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்தனர். செப்டம்பர் 9 நிகழ்வு நடந்து ஒரு வருடத்திற்குள், புலம்பெயர்ந்த சீக்கியர் ஒருவரை ‘பழிவாங்கும்’ வகையில் கொலை செய்ததற்காக டெக்சாஸில் உள்ள ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் குஜராத்தில் இந்திய முஸ்லீம் குடிமக்கள் பாதிப்பிற்குள்ளானதாக பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவோ அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதாகவோ இன்றுவரையில் வாஜ்பாய் கூறவில்லை.

உண்மையில், அரசாங்கம் மற்றும் தன்னுடைய அலுவலகத்தின் மாண்புகளைக் குலைக்கும் வகையில் தான் செயல்படுவதைப் பொருட்படுத்தாமல், தனது கட்சி மற்றும் பரிவாரத்திற்கு மிகவும் விசுவாசமுள்ளவர் என்பதை நிரூபிக்கவே வாஜ்பாயி முயன்றார். பாராளுமன்றம் கோத்ரா நிகழ்வைக் கண்டனம் செய்திருந்தால், பின்னர் நடந்த படுகொலைகள் நடந்திருக்காது என்று 2002 ஏப்ரல் 17 அன்று வாஜ்பாய் கூறினார். திட்டமிட்டபடி வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, கோத்ராவில் அந்த நிகழ்வுகள் நடந்த நாளில் ஒரு விவாதத்தை நடத்தி அந்த நிகழ்வுகளைக் கண்டனம் செய்வதற்கு பாராளுமன்றத்தின் தலைமையில் இருந்த அவர் உத்தரவிட்டிருக்கலாம்.

”குஜராத்தில் ஆட்சியை மாற்றுகின்ற எண்ணத்திலேயே நான் கோவாவிற்குச் சென்றேன். ஆனால் என்னுடைய மதிப்பீட்டின்படி, தலைமையில் ஏற்படுத்தப்படும் மாற்றம் நிலைமையை மேலும் மோசமாக்கி விடும் என்பதாக நான் உணர்ந்தேன்” என்று மோடியை ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து நீக்கிவிட முடிவு செய்ததாகவும், ஆனால் குஜராத்தில் ஏற்படப் போகும் பின்னடைவைப் பற்றி அச்சமடைந்ததாகவும் கூறி வித்தியாசமான அறிக்கையை மே மாத துவக்கத்தில், இந்த முறை ராஜ்யசபாவில் அவர் வெளியிட்டார். அந்த நேரத்தில், தலைமையில் ஏற்படுத்தப்படும் மாற்றத்தை எதிர்த்தவர்களாக ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியினரே இருந்தனர். மோடியைப் பதவியில் இருந்து நீக்குவது குஜராத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு தற்காலிக நிவாரணத்தையாவது வழங்கியிருக்குமா என்பது தெரியவில்லை. ஆனாலும் குற்றவாளிகள் மற்றும் குண்டர்களின் அச்சுறுத்தல்களுக்கு தான் பிணைக் கைதியாக இருந்ததை பிரதமர் ஒப்புக் கொள்கிறார். “வாஜ்பாய் தான் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்தை மீறி அந்த வன்முறைக் கும்பலின் உத்தரவுகளுக்கு அடிபணிந்தார்… பேரரசரின் மீது எந்த உடையும் இருக்கவில்லை. தார்மீக அதிகாரத்தின் இறுதிச் சரடுகளும் அப்போது உருவப்பட்டு விட்டிருந்தன” என்று பி.ஜி.வர்கீஸ் அதுகுறித்து எழுதினார்.

சித்தார்த் வரதராஜன் தொகுப்பில் வெளியான “குஜராத்: துயரம் உருவான விதம்” என்ற புத்தகத்தின்  முன்னுரையில் இருந்து ஒரு பகுதி

https://thewire.in/politics/let-us-not-forget-the-glimpse-we-got-of-the-real-vajpayee-when-the-mask-slipped

-தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு, விருதுநகர்

Leave a Reply

You must be logged in to post a comment.